தம்பிலுவில் மத்திய பொதுச்சந்தைக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் சென்ற பெற்றோர்கள், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜனிடமும் மகஜர் கையளித்தனர்.
இதன்போது திருக்கோவில் பிரதேச செயலாளர் தெரிவிக்கையில், 'திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கிராமம் சனத்தொகை அதிகமாகக் கொண்டதாகும். இம்மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி,
கல்வியமைச்சின் செயலாளருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில், '
'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் தொனிப்பொருளிலான திட்டத்துக்காக திருக்கோவில் கல்வி வலய அதிகாரிகளினால் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், தம்பிலுவில் கிராமத்தில் எந்தவொரு பாடசாலையும் தெரிவு செய்யப்படவில்லை. இப் பிரதேசத்தின் முக்கிய பாடசாலையாக விளங்கும் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தையும் இத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் , இக்கிராமத்திலுள்ள பாடசாலைகள் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளினால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் எமது கிராமத்திலுள்ள பாடசாலைகளும் உள்வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ள வேண்டும். வலய கல்விப்பணிப்பாளர் , பிரதிக்கல்வி பணிப்பாளர் போன்றோரை இடமாற்றம் எனவும் , நீதியான முறையில் கல்வி அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் இதற்கான சிறந்த தீர்வை எமக்கு வழங்காவிடின், எமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாது கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம்' என்றனர்.






























