பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கினை பதிவு செய்ய முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) விசேட சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு உயர் தரப் பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ளதால் இன்றைய தினம் வாக்கினை பதிவு செய்ய முடியாமற்போகும் வாக்காளர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி தபால் மூல வாக்கினை அளிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ள சுயவிபரக் கோவைகளை நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக கையளிக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கடமைகளை தவறவிடுவோருக்கு தண்டனை விதிக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.