அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள உயர்தர மாணவர்கள்,மற்றும் இளைஞர்,யுவதிகள் ஆகியோர் ஆங்கிலம் மற்றும் கணினி அறிவினை மேம்படுத்தி உலகின் தொழில்நுட்ப அறிவுடன் தமது தொழில் ரீதியான முன்னேற்றங்களை அடையும் வகையில் வடக்கு,கிழக்கு மாணவர்கள், இளைஞர்,யுவதிகள் ஆகியோர் தமது கணினி,ஆங்கில அறிவினை வளர்த்து கொள்ள வேண்டும் என லண்டன் சைவநெறிக் கூடத்தின் இணைப்பாளரும் லண்டன் கனகதுர்க்கை ஆலயத்தின் தர்மகர்தாவான ஆர்.டி.ரத்தினசிங்கம் தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட சைவநெறிக் கூடத்தின் தலைவர் கே.கணேஷ் தலைமையில் தம்பிலுவில் சைவநெறிக் கூட அலுவலகத்தில் 2015.09.17ஆம் திகதி மாணவர்கள், இளைஞர்,யுவதிகள் ஆகியோர்களுக்கான இலவச கணினி பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் இன்றைய நவீன உலகில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் ஆங்கில அறிவும் கணினி தொழிநுட்பமும் முக்கியமாக காணப்படுகின்றது.
இதனை புரிந்து கொண்டு வடக்கு,கிழக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்,யுவதிகள் ஆகியோர் ஆங்கிலம்,கணினி அறிவு ஆகிய துறைகளில் அதித கரிசனைகள் காட்டுவதன் மூலம் ஏனைய துறைகளையும் இலகுவாக வெற்றி கொள்ள முடியும். இவர்களுடன் அரச துறைகளில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்களும் தமது தொழில் ரீதியான சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஆங்கிலம்,கணினி அறிவுகளை வளர்த்துக் கொள்வதற்கு நேரத்தினை ஒதுக்கிக் கொள்வது சிறந்த விடயமாக அமையக் கூடும்.இதற்கான நிதி உதவிகளை லண்டன் சைவநெறிக் கூடம் மற்றும் லண்டன் கனகதுர்க்கை ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர்கள் வழங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் சைவநெறிக் கூடத்துக்கு நான்கரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 கணினிகள் வழங்கப்பட்டுள்ளதுடன்,கஞ்சிகுடியாறு மீள் குடியேற்றக் கிராமத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் 75 குடும்பங்களுக்கு உடுதுணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் லண்டன் சைவநெறிக் கூடம் மற்றும் லண்டன் கனகதுர்க்கை ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட தம்பிலவில் சைவநெறிக் கூடத்தின் நிர்வாக உறுப்பினர்கள் இளைஞர்,யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
