நாடு பூராகவும் நாளை (17.08.2015) நடைபெறவுள்ள 196 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான 8 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.வாக்களிப்பது உங்களின் உரிமை உங்களின் அதிகாரத்தை அச்சமின்றி சந்தேகமின்றி பயன்படுத்துங்கள். வாக்களிப்பு பணிகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும். காலை வேளையிலேயே சென்று உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும். பி.ப சென்று வாக்களிப்போம் என்று எண்ணவேண்டாம். என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்குச் சீட்டில் வாக்களிப்பது தொடர்பான விளக்கத்தினையும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். வாக்காளர் ஒருவர் தாம் விரும்பிய கட்சியின் சின்னத்திற்கோ அல்லது சுயச்சைக் குழுவின் சின்னத்திற்கோ முன்னால் உள்ள கட்டத்தில் புள்ளடி ஒன்றை இடுதல் வேண்டும். விரும்பினால் விருப்பு வாக்கினை அளிக்கலாம் அல்லது அளிக்காது விடலாம். ஒரு விருப்பு வாக்கு அளிக்கலாம் அல்லது இரண்டு அல்லது மூன்று விருப்பு வாக்குவரை அளிக்கலாம். இதற்கு மேல் விருப்பு வாக்குகள் அளித்தால் விருப்பு வாக்குகள் நிராகரிக்கப்படும். ஆனால் கட்சிக்குரிய அல்லது சுயச்சைக் குழுவுக்குரிய வாக்கு செல்லுபடியாகும்.
இதே போன்று ஒன்றுக்கு மேற்பட்டு கட்சிக்கு அல்லது சுயச்சைக் குழுவுக்கு அளிக்கும் வாக்குப் பத்திரமும் நிராகரிக்கப்படும். இதே போன்று கட்சிக்கு அல்லது சுயச்சைக் குழுவுக்கு வாக்களிக்காது விருப்பு வாக்குமட்டும் அளிக்கப்படும் வாக்குப் பத்திரமும் நிராகரிக்கப்படும். எனவே வாக்காளர்கள் கவனமாக வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.