Contact Form

Name

Email *

Message *

தமிழ் மக்களின் பிரதிநிதி ஜதார்த்தவாதி மட்டுமல்லாது அரசியல் சாணக்கியமும் தெரிந்தவராக மிளிர வேண்டும்

அரசியலை முன்னெடுத்து செல்லும்  தமிழ் மக்களின் விசுவாசமான பிரதிநிதி ஜதார்த்தவாதி மட்டுமல்லாது அரசியல் சாணக்கியமும் தெரிந்தவராக மிளிர வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத் தேவை எ…

Image
அரசியலை முன்னெடுத்து செல்லும்  தமிழ் மக்களின் விசுவாசமான பிரதிநிதி ஜதார்த்தவாதி மட்டுமல்லாது அரசியல் சாணக்கியமும் தெரிந்தவராக மிளிர வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத் தேவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சிந்தாத்துரை ஜெகநாதன் தெரிவித்தார்.

தம்பிலுவிலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக சுயநலம் இன்றி இலாபம் கருதாது செயற்படும் ஒரு சாணக்கியம் மிக்க சேவகன் தமிழ் மக்கள் தரப்பில் தேவை. தமிழ் மக்களின் தேவைகளை அபிலாசைகளை கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் முறையாக பறைசாற்றும் திறமையும் தலைமைத்துவமும் மிக்க சேவகனே இன்று எமக்கு தேவை.

தமது கையாலாகாத தனத்தினால் உரிமைக் கோரிக்கைகள் உதவிக் கோரிக்கைகள் காலடியில் போட்டு மிதித்து துவைக்கப்படும் துர்ப்பாக்கிய நிலையை இல்லாதொழிக்க ஓரு சிறந்த மக்கள் தலைவன் தேவை. ஒடுக்கப்படும் இனத்தின் அடையாளங்களை ஒடுக்கும் இனம் பிரதியீடு செய்யும் நிகழ்சிப்போக்கிற்கு முட்டுக்கட்டை போடும் தமிழ் அரசியல் தலைவனின் தேவையே இன்று உணரப்பட்டுள்ளது.

உடமையும் உரிமையும் கொண்ட சொந்த நிலங்களை அழித்து அடாத்தனம் பண்ணும் அடாவடித்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி போடவேண்டும்.  மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்குகனைப் பெற்று சுய நலத்திற்காக அரசியல் பதவிகளை பெற்றுக் கொள்கின்ற மழைக்காலத்து காளான்களாக செயற்படும் அரசியல் வியாபாரிகளை விடுத்து சிறப்பான தொலைநோக்குப் பார்வை மூலம் செயற்படுபவர்களுக்கு வாக்களிப்பதே இன்று மக்களாகிய உங்களது கடமை.

ஒரு சிறந்த மக்கள் தலைவனின் அச்சாணி உண்மையும் நேர்மையுமாகும். ஒரு சமூகத்தின் தலைவன் எப்போதும் தான் சார்ந்த சமூகத்தின் நிலைப்பு தற்காலத் தேவை முதவியவற்றை அறிந்தவனாகவும் அவற்றைப் பூர்த்தி செய்பவனாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து சுய இலாபம் கருதியும் அரசியல் அதிகார ஆசையும் கொண்டவர்களுக்கு வாக்குகளை போட்டு வாக்கை சிதறடிக்காது சிந்தித்து செயலாற்றும் தருணம் இதுவே

தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் காணி அபகரிப்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின்;  நிலை என்பவற்றை சட்ட வாழ்வில் கண்டு அதற்கென குரல் கொடுத்த போதிலும் அரசியல் அதிகாரமில்லாத கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதனை கண்கூடாக காணும் போது அரசியல் உள்வாங்கலின் தேவை அவசியமாக உணரப்பட்டது. தமிழ் மக்கள் மனிதாபிமற்ற முறையிலும் நடப்பிணங்களாகவும் நடாத்தப்படும் இழி நிலையை சீராக்கி பல்திறப்பட்டவர்களின் எண்ணற்ற நியாயமான கோரிக்கைகளை பாராளுமன்றம் தனிலே பறைசாற்ற மக்கள் ஆணை கொடுத்தால் மக்களின் ஆணையை மதித்து அவர்களுக்காக செயற்படும் மனிதாபிமானம் மிக்க தலைவராக அவர்களுக்காக உண்மையாகவும் விசுவாசமாகவும் செயற்பட தயாராகவே உள்ளேன்.

இனத்தின் மீதான அநீதிகளை வெளிக் கொண்டு வருவதற்கும் வாக்குறுதி தவறாத  ஒரு உண்மைப்பிரதிநிதி தேவை என்பதுடன் தனித்துவமான அரசியலை முன்னெடுத்து செல்லும்  தமிழ் மக்களின் விசுவாசமான பிரதிநிதி ஜதார்த்தவாதி மட்டுமல்லாது அரசியல் சாணக்கியமும் தெரிந்தவராக மிளிர வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத் தேவை. மக்களது உரிமைக்குரல் பணத்தினாலும் அதிகாரச் செல்வாக்கினாலும் மறுக்கப்படும் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனரஞ்சகமான அரசியல் நீரோட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படுவதோடு நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை விருப்பாகவும் இலக்காகக் கொண்டு இத் தேர்தல் களம் இறங்கியுள்ளேன்.

தமிழ் தேசியத்தில் பற்றுறுதியுடன் நின்று எமது தேசியத்தின் போராட்டத்திலும் அரசியலிலும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நிரூபித்து வந்தவர்கள்தான் அம்பாறை மாவட்ட மக்கள் என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இதனை இப்பாராளுமன்ற தேர்தலிலும் நிரூபித்து தமக்கான சிறந்த அரசியல் பிரதிநிதியை பிரதேச முன்னேற்றம் கருதி அனுப்ப வேண்டிய தருணம் உங்கள் வாக்கெனும் பாரிய ஜனநாயக உரிமையிலே தங்கியுள்ளது. இதற்கென மக்கள் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

You may like these posts