Contact Form

Name

Email *

Message *

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான நடமாடும் சேவை

கடந்த மூன்று தசாப்த கால யுத்த சூழ்நிலையின்போது பல்வேறு இழப்புகளுக்கு முகம்கொடுத்தவர்களுக்கென நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் புனர்வாழ்வு அதிகார சபையினால் ஏற்பாடு …

Image
கடந்த மூன்று தசாப்த கால யுத்த சூழ்நிலையின்போது பல்வேறு இழப்புகளுக்கு முகம்கொடுத்தவர்களுக்கென நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் புனர்வாழ்வு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நடமாடும் சேவை இன்று(25) திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. திருக்கோவில்  பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் காலை 9 மணி முதல் பி.ப.4 மணிவரை நடைபெற்ற இந்நடமாடும் சேவையின்போது சுமார் 500 பேர் சமூகமளித்து தத்தமது பிரச்சினைகளை முன்வைத்தனர் .

இந்நடமாடும் சேவையின்போது பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, இறக்காமம் ஆகிய பிரதேச செயலப் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் சமூகமளித்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆவணங்கள் சகிதம் முன்வைத்தனர். இதன்போது புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஓய்வு நிலை மேலதிக அரசாங்க அதிபருமான நா.புவனேந்திரன் தலைமையிலான புனர்வாழ்வு அதிகார சபையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளையும் கையேற்றுக் கொண்டனர்.

யுத்த சூழ்நிலையின்போது உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர், உடமைகளை இழந்தவர்கள் என பல்தரப்பட்ட தரப்பினர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவென தத்தமது ஆதாரங்களை இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இந்நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நா.புவனேந்திரன் மக்கள் மத்தியில் குறிப்பிடுகையில், இன்றுள்ள அரச அதிகாரிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் பொருட்டு அன்பாகவும் மனித விழுமியங்களை மதித்தும் செயற்பட வேண்டும். கடந்த கால போர்ச் சூழலின்போது பல்வேறான இழப்புக்களைச் சந்தித்த மக்களுக்கு மேலும் இன்னல்களையும் கஷ்டங்களையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எமது அதிகார சபை 1983 ஆம் ஆண்டு முதல் பல்வேறான சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. அன்று முதல் நமது மக்களும் தேவைகளை முன்வைத்து ஏதோ ஓர் எதிர்பார்ப்பினை இலக்காக வைத்து எம்மை நாடி வருகின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் எமது அதிகார சபைக்கு பல்தரப்பட்ட முறைப்பாடுகளை செய்துள்ளார்கள். அவ்வாறானவர்களுக்கு உதவி புரிவதில் சில பிரச்சினைகள் காரணமாக சில உதவிகளை எம்மால் செய்ய முடியாமல் இருந்துள்ளன. அவற்றுள் நிதிப்பற்றாக்குறை, சம்பந்தப்பட்டவர்களின் கேவைகள் உரிய முறையில் பூரணப்படுத்தப்படாமை, தொடர்பாடற் பிரச்சினை போன்ற காரணங்கள் பிரதானமானவை.

இவ்வாறான பிரச்சினைகளுடன், எம் அலுவலகத்தினை நோக்கி தூரப் பிரதேசத்திலிருந்து வருகை தரும் மக்களின் பல்தரப்பட்ட அசௌகரிகயங்கள் போன்ற காரணங்களுக்கமைவாக எமது அலுவலகத்தில் வந்து குவிந்துள்ள கோவைகளை மக்களின் காலடிக்கு கொண்டு வந்து அக்கோவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து குறிப்பிட்ட ஒரு சில வாரங்களுக்குள் நிவாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே இவ்வாறான நடமாடும் சேவைகளை நாம் நடத்தி வருகின்றோம் என்றார்.

இதேவேளை அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை ஒன்றிணைத்து இவ்வாறாக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நாளை வெள்ளிக்கிழமை(26) கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்றது. இந்நடமாடும் சேவையின்போது கல்முனை தமிழ்ப்பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் பிரசன்னமாகி தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் முறைப்பாடு செய்து ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளனர்.










You may like these posts