Contact Form

Name

Email *

Message *

நற்பலன்கள் நல்கும் சிவராத்திரி நன்னாள்!

எதிர்வரும் மாசி 08ஆம் தேதி, (2012/02/20) திங்கட்கிழமை அன்று உலகெங்கும் வாழும் சைவத் தமிழர்களால், மகா சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட இருக்கிறது. சைவர்களின் முழுமுதற் கடவுளா…

Image


எதிர்வரும் மாசி 08ஆம் தேதி, (2012/02/20) திங்கட்கிழமை அன்று உலகெங்கும் வாழும் சைவத் தமிழர்களால், மகா சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட இருக்கிறது. சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்காக அனுட்டிக்கப்படும் இவ்விரதம்,இன்னோரன்ன நன்மைகளை எமக்கு அள்ளி வழங்கக் கூடியது.சிவராத்திரி என்பதை சிவ + ராத்திரி = சிவனுக்குரிய இரவு எனப் பிரிக்கலாம். அழகு தமிழில் இதைச் “சிவனிரா நோன்பு” என்பர். வருடாவருடம், மாசிமாத அமாவாசைக்கு முதல் நாளான தேய்பிறை சதுர்த்தசி அன்று இவ்விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

நமக்குத் தெரிந்தது ஒரு சிவராத்திரி தான் என்றாலும், உண்மையில் சிவராத்திரி ஐந்து வகைப்படும்.
மாதந்தோறும் அமாவாசைக்கு முதனாளும் பௌர்ணமிக்கு முதனாளும் (வளர்பிறை – தேய்பிறை சதுர்த்தசிகள்) என வருடத்துக்கு 24 நாட்கள் அனுட்டிக்கப்படுவது “நித்திய சிவராத்திரி”.
மாதந்தோறும், தேய்பிறை 14ஆம் நாளில் (சதுர்த்தசி) அனுட்டிக்கப்படுவது “மாத சிவராத்திரி”.
ஒவ்வொரு வருடமும் தைமாதப் பூரணைக்கு அடுத்தநாளிலிருந்து, தை அமாவாசை வரை 13 நாட்கள் அனுட்டிக்கப்படுவது “பக்க சிவராத்திரி”
திங்கட்கிழமை முழுநாளும் (தமிழ்க்கணக்குப் படி காலை 6 மணி முதல் அடுத்தநாள் காலை 6 மணி வரை) அமாவாசை திதி இருந்தால் அன்று அனுட்டிக்கப்படுவது, “யோக சிவராத்திரி”. இது எப்போதாவதுதான் வரும்.
இவற்றுக்கு அடுத்து, மாசி மாதம் அனுட்டிக்கப்படுவது தான் மகா சிவராத்திரி.
இந்த ஐந்தினுள்ளும் மகா சிவராத்திரி ஒன்றை அனுட்டித்தாலே ஏனைய நான்கையும் அனுட்டித்த பலன் கிடைக்கும் என்பது தான் அதன் சிறப்பு.

ஊழியின் முடிவு நாளில், எம்பிரான் சிவன் மட்டுமே எஞ்சி நிற்பான். பஞ்சபூதங்கள், உயிர்கள், பிரபஞ்சம் யாவுமே அவனுள் ஒடுங்கி உறங்கிக் கொண்டிருக்கும். அந்த இரவு அவனுக்கு மட்டுமே உரியது என்பதால், அது சிவராத்திரி எனப் பெயர்பெற்றது. அவ்விரவை நினைவுகூர்ந்து, மானிடர் நாம் கொண்டாடும் நாளே இந்த மகா சிவராத்திரி!
அந்நாளில் தான் , சிவபெருமான், இலலிதா தேவியைப் படைத்து, அவளுடன், மாதொருபாகர் கோலம் கொண்டு, படைப்பை ஆரம்பித்து வைக்கிறார்.

சிவராத்திரி என்றால் நமக்குத் தெரிந்ததெல்லாம் விடிய விடிய கண்விழிக்கும் விரதம் என்பது தான். இதற்காகவே புதுத்திரைப்பட இறுவட்டுக்கள், இணையம், தொலைக்காட்சி என்பவற்றை சரணடைந்து அன்று இரவு முழுக்க கண்விழிக்கும் பலர்தான் நம்மில் அதிகம். இது தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; எதிர்மறையான பலன்களையும் எமக்கு ஏற்படுத்திவிடக்கூடும். எனவே, வெறுமனே கண்விழிப்பதை விட, விரதத்துக்கான சரியான நியமங்களை அறிந்து விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நமது முன்னோரின் கணித அளவைப்படி, ஒரு நாளை, 60 நாழிகைகளாக வகுத்திருந்தனர். (1 நாழிகை= 24 நிமிடம் ) இதில், 7 ½ நாழிகைப் பொழுதை (= 3 மணித்தியாலம்) “ஒரு சாமம்” என்று வகுத்து வைத்திருந்தனர். இக்கணக்கின்படி, பகலில் 4 சாமங்களும், இதேபோல் இரவில் நான்கு சாமங்களும் அமையும்.
இப்படி வருகின்ற இரவின் நான்கு சாமங்களிலும் பூசை நிகழ்வதைத் தான் “சிவராத்திரி நாலுசாமப் பூசை” என்பார்கள்.

சிவராத்திரி இரவின் 14ஆம் நாழிகை தொடக்கம் 16ஆம் நாழிகை வரையான நேரம் (11.36pm– 12.48am) மிகப் புனிதமானது; இக்காலவேளை “இலிங்கோற்பவ முகூர்த்தம் (இலிங்கத்தே தோன்றிய நேரம்) எனப்படுகிறது.
சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இக்காலவேளை வரையாவது கண்விழித்து, சிவபூசையில் கலந்துகொள்ளவேண்டும்.

இவ்விரதத்தை அனுட்டிக்க வயது வரம்பெல்லாம் கிடையாது. சகலரும் கடைப்பிடிக்கலாம். உபவாசம் இருத்தல், மற்றோருடன் வீண்பேச்சளக்காது தனியே சிவசிந்தையில் திளைத்திருத்தல், இரவு கண்விழித்தல் இவை மூன்றும் இதற்குரிய பிரதான நியமங்களாகும். இதைத்தான் “பசித்திரு – தனித்திரு – விழித்திரு; ப-த-வி தானே கிட்டும்” என்று சொல்லிவைத்தார்கள்
அன்று முழுவதும் உபவாசமிருக்க முடியாதவர்கள் பால் – பழம் அருந்தலாம், அதுவும் முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம்.
அன்று சிவாலயம் சென்று நான்கு சாமங்களிலும் பூசை வழிபாடுகளில் கலந்துகொள்வது முக்கியமானது. ஆலயம் செல்ல முடியாதவர்கள் , தம் வீடுகளில் கூட அன்று சிவபூசை செய்யமுடியும்.
பழம், வெற்றிலை, பாக்கு, பூ, கற்பூரம், நீர் முதலான வழமையான பூசைப்பொருட்களுடன் நான்கு சாமங்களிலும் விரும்பிய நைவேத்தியம் ஏதாவது தயார் செய்து படைத்து, இறைவனை பிரார்த்திக்கலாம். அன்று முழுக்க திருமுறைகள், திருவைந்தெழுத்து, ஆன்மிக நூல்கள், தோத்திர நூல்கள், போன்றவற்றை ஓதி பொழுதைக் கழிக்கலாம்.

ஒவ்வொரு சாமத்துக்கும் ஒவ்வொரு விசேட மலர், விசேட இலை, விசேட தூபம், விசேட பிரசாதம் என்று உண்டு. அவற்றை ஒவ்வொரு சாமத்திலும் இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம். அது சரியாகத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.. சாதாரண பூக்கள், வில்வமிலைகள் மட்டும்கூட போதும்.

சிவராத்திரி விரதமானது, எல்லாவிதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கூடியது. எனவேதான் எல்லா விரதங்களையும் விட மேம்பட்டதென போற்றப்படுகிறது. சிவராத்திரிக்குரிய அடி முடி தேடிய கதை, வேடன் சிவபூசை செய்த கதை எல்லாம் நாம் அறிந்தது தான். அறியாமல் இவ்விரதத்தைக் கடைப்பிடித்தாலே அளவற்ற நற்பலன்கள் கிட்டுமென்றால், தெரிந்தே அனுட்டிக்கும் போது கிடைக்கும் நற்பலன்கள் தான் எத்தனை எத்தனை!!!

விரும்பியதெல்லாம் கிட்டக்கூடிய இந்தப் புனிதநாளில், தயவுசெய்து, எனக்கு அது வேண்டும், இது வேண்டும், நீ இதைக் கொடு, நான் உனக்கு அதை (நேர்த்தியாக) தருவேன் என்று இறைவனுடன் பேரம்பேச வேண்டாமே??
வேண்டத் தக்கது அறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
(திருவாசகம், குழைத்த பத்து - 06)
அடி முடி தேடியபோது, உன்னைக் காண விரும்பிய திருமால், பிரமனுக்கு அரியவனாய் தோன்றியவனே, எனக்கு வேண்டியது என்ன என்று உனக்குத் தெரியும். அப்படி என்ன வேண்டினாலும் தரக்கூடியவன் நீ. என்னை உன் அடியவனாக்கியவனும் நீ தான். எனக்கு பொருத்தமானது என்றெண்ணி, நீ எனக்கு எதை வழங்குகிறாயோ அதை நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். அப்படி நான் உன்னிடம் ஏதும் எதிர்பார்க்கிறேன் என்றால் அது ஒன்றே ஒன்று தான். உன் மீது மாறாத பக்தி வேண்டும்.
மணிவாசகப்பெருமானின் திருவாசகத்தில் ஒரு பாடல் இது! என்ன அற்புதமான வரிகள்!!! உண்மையான பக்தி என்றால் இப்படியன்றோ இருக்கவேண்டும்.
இந்த சிவராத்திரி நன்னாளில், எனக்கு அது தா, இது தா என்று கேட்காமல், இப்பதிகம் பாடி இறைவனை பிரார்த்தியுங்கள். அவன் நிச்சயம் நமக்கு அருள் புரிவான்!!! நமக்கு தேவையானது என்னவென்று அவனை விட அறிந்தவர் வேறு யார்!
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!!

You may like these posts