BY-R.Sayan -
எமது ஊரின் படைப்பாளிகளை எமது இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றோம் . இன்றைய பதிவு எமது ஊர் ஆலயங்களின் பாடல்களை பாடிய எமது ஊரை சேர்ந்த கோவிலூர் செல்வராஜன் பற்றியதுஇவர் பாடிய பாடல்களை கேட்க - Click here
ஒரு ஊடகவியலாளனாக,ஒலிபரப்பாளனாக,எழுத்தாளனாக,கவிஞனாக,பாடலாசிரியனாக,சஞ்சிகை ஆசிரியனாக, நடிகனாக,
இசையமைப்பாளனாக,பாடகனாக என்று பல பரிமாணங்களில் தன்னை பதிவுசெய்துகொண்டு ,உலகளாவிய ரீதியில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட எமது மண்ணின் மைந்தன் திரு.கோவிலூர் செல்வராஜன் அவர்கள் தம்பிலுவில்,திருக்கோவில்
மக்களுக்கான இணையத்தளத்தில் தன்னை இணைத்துக்கொண்டு,தனது படைப்புகளை பகிர்ந்துகொள்ள இருக்கின்றார்.அன்புக்கும்
பெருமைக்குமுரிய எமது மண்ணின் மைந்தனை நாம் மனமார வரவேற்றுக்கொள்கின்றோம்.
திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் படித்து,பின் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் க.பொ.த(சாதாரண)பரீட்சையில்
அறுபத்தெட்டில் தோற்றி சித்தியடைந்தார்.பின்பு க.பொ.த (உயர்தரத்தை)மட்டக்களப்பில் படித்து சித்தியடைந்தார்.எழுபதினாலம் ஆண்டு
கொழும்பு மெய்கண்டான் நிறுவனத்தின்."நட்சதிரமாமா"கலாவல்லி"ஆகிய இரண்டு சஞ்சிகைகளுக்கும் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று
![]() |
| கோவிலூர் செல்வராஜன் மற்றும் நடிகர் சிவாஜி |
தமிழ்நாட்டுப் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் யாவற்றிற்கும் தடை விதித்திருந்தார்.அதனால் ஈழத்து சஞ்சிகைகளுக்கு ஒரு எழுச்சியும்
வளர்ச்சியும் கிடைத்தது.இவர் ஆசிரியராக இருந்த சஞ்சிகைகள் அமோக வரவேற்புடன் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின.
இதேவேளை இவர் தன்னை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக பதிவு செய்துகொண்டு,தமிழ்,பொருளாதாரம்,
அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் படித்துத் தேறினார்.
எழுபதுகளில் ஈழத்துப் "பொப்பிசை"எழுச்சிபெற்ற காலமாகும்.இவரது மைத்துணர் இரா.தெய்வராஜன் அவர்களின் உந்துதலாலும்,வழிநடத்தலாலும்,மட்டுநகர் "ஜெயாலயா"இசைக்குழுவில் பாடகராகவும்,தொகுப்பாளராகவும் தேர்ச்சி பெற்றார்.அமரர்
எருவில் மூர்த்தி அவர்களின் பாடல்களை தெய்வராஜனும்,இவரும் சேர்ந்துபாடி,பின்பு இலங்கை வானொலிவரைக்க்கும் எடுத்துச் சென்றார்கள்.
எழுபதுகளில் கொழும்பு "சிவா என்டேடைன்மென்ட்"தயாரித்து வழங்கிய பொப்பிசை நிகழ்சிகளில் மறைந்த பிரபல அறிவிப்பாளர் திரு கே.எஸ்.
ராஜா அவர்களுடன் சேர்ந்து அறிவிப்பாளராகவும் தன்னை உருவாக்கிக்கொண்டார்.இக்காலப்பகுதியில் தினகரன்,வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவர் தொடர் கதைகளை எழுதிவந்தார்."படகுத்துறை அருகினிலே"லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி"ஆகியவை இவருக்கு
ஜனரஞ்க வரவேற்பை பெற்றுக்கொடுத்தன.
இலங்கையில் தயாரித்து வெளிவந்த "நான் உங்கள் தோழன்"பாதைமாறிய பருவங்கள்"ஆகிய திரைப் படங்களிலும் இவர் நடித்தும்,பங்களிப்பும்
செய்திருக்கிறார்.மறைந்த திருக்கோவில் கண்ணன் முதலாளி அவர்களின் அனுசரணையுடன்,தம்பிலுவில் மகாவித்தியாலய மைதானத்தில்
இவர் நடத்திய "சுவீட் நைட்"என்ற கதம்ப நிகழ்ச்சி எமது பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.இலங்கையின் முன்னணிக் கலைஞர்களுடனும்,அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவுடனும் களைகட்டிய அந்த நிகழ்ச்சி ஊர் முழுதும் பேசப்பட்டது.
நன்றாகவே போய்க்கொண்டிருந்த ஈழத்து தமிழ் கலை வளர்ச்சியில்,எழுபத்தியேளில் மாற்றம் வந்தது.ஆட்சி மாறியபோது ஜே.ஆர்.
ஜெயவர்த்தன பிரதமாராக வந்து இந்தியப் பத்திரிகைகளின் தடையை நீக்கினார்.அதனால் மீண்டும் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள்
இலங்கையில் கோலோச்சத் தொடங்கின.இதேவேளையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.சரியான நேரத்தில் சரியான பதவிக்கு கோவிலூர் அவர்கள் விண்ணப்பித்தார்.
திறமையும்,தகுதியும் இருந்தாலும்,ஒரு அரசியல் செல்வாக்கு இல்லாமல் யாரும் இலங்கை வானொலிக்குள் புகமுடியாது.
அதுவும் கிழக்கு மாகாணத்திலிருந்து செல்வது மிகக் கடினம்.மறைந்த முன்னாள் பொத்துவில் தொகுதி பா.உ.ஜனாப் அப்துல் மஜீத்
அவர்களின் அன்பை கோவிலூர் பெற்றிருந்தார்.அரசில் மஜீத் அவர்கள் அமைசராகவும் இருந்தபடியால் அவரின் பரிந்துரை ஏற்றுகொள்ளப்பட்டது.இலங்கை வானொலியில் பதவி கிடைத்தது.
திரு.கோவிலூர் செல்வராஜன் இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் பல துறைகளில் பரிணமித்தார்.இலங்கை தேசிய தொலைக்காட்சியான
"ரூபவாகினியிலும்"இவரது பாடல்களும்,படைப்புகளும் வெளிவந்து இவரை நாடறிந்த கலைஞனாக உருவாக்க உதவின.
இலங்கையில் உள்ள திருத்தலங்களுக்கு தனித்தனியாக பக்திப்பாடல்கள் பாடி வெளியிடும் இவர் முயற்சியில் முதலாவதாக
"உகந்தை மலை முருகன்"பாடல்கள் வெளிவந்தன.தொடர்ந்து திருக்கோவில் முருகன் பாடல்கள்,அதைத்தொடர்ந்து தம்பிலுவில்,
திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள பிள்ளையார்,அம்மன் பாடல்கள் என்று இவரும்,தெய்வராஜனும் சேர்ந்து பாடி அவற்றை
ஒலிநாடவாகவும்,பின்பு இறு வெட்டுக்களாகவும் வெளியிட்டார்கள்.இவையெல்லாம் இன்று ஊர் பகுதிக் கோவில்களிலும்
மட்டுநகர் பிரதேசத்து கோவில்களிலும் தினமும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இதைவிட இவர் இசையமைத்துப் பாடி வெளியிட்ட "தேசத்தின் தென்றல்" என்ற தாயாக உணர்வுப் பாடல்களும் ஐரோப்பிய
வானொலிகளிலும்,கனடா,ஆஸ்திரேலிய ஆகிய நாட்டில் இயங்கும் தமிழ் வானொலிகளிலும் ஒலிபரப்பாகின்றன.
தொண்ணூற்றி ஏழாம் ஆண்டு இவர் படைப்பாக வெளிவந்த "விடியாத இரவுகள்"என்ற சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் நாடு தழுவிய
போட்டியில் "லில்லி தேவசிகாமணி இலக்கிய பரிசு கிடைத்தது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தொண்ணூறில் இவர் நோர்வே நாட்டுக்கு புலம் பெயர்ந்தார்.அங்கேயும் பல கலை முயற்சிகளில்
பங்கெடுத்துக்கொண்ட இவர்,அங்குள்ள தமிழ் நாதம் வானொலியிலும் பணிபுரிந்தார்.இக்காலப்பகுதியில் இவரின் "புதுக்கோலங்கள்"மெல்லிசைப்பாடல்கள் தொகுப்பு நூல்,மண்வாசம்,கவிதைத்தொகுப்பு ஆகியன வெளிவந்தன.
இரண்டாயிரத்திரண்டில் இவர் இலண்டன் மாநகருக்கு இடம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இங்கேயும் இவரின் எழுத்துப்பணி தொடர்கிறது.
ஐரோப்பியநாடுகளில் இவருக்கு பல பாராட்டு விழாக்கள் இலகியர்களால் எடுக்கப்பட்டன.கொழும்பு தமிழ் சங்கமும் இவரை
பாராட்டி மகிழ்ந்தது.இரண்டாயிரமாம் ஆண்டு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலயுதன் ஆலய முன்றலில் இவருக்கு உதயசூரியன்
கலா மன்றமும்,தம்பிலுவில்,திருக்கோவில் ஆசிரியர் வட்டமும் பெரிய பாராட்டு விழா எடுத்தனர்.
இவர் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணில் பாசம் கொண்டவராகவும்,தமிழ் மொழியில் நேசம் உள்ளவராகவும்
இருக்கின்றார்.இவற்றுக்கு இவரது படைப்புகளே சான்று பகிர்கின்றன.
---
இவரது பயணம் தொடர்ந்து செல்ல எமது இணையதளம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
இவரது பயணம் தொடர்ந்து செல்ல எமது இணையதளம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்





Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!