
கடந்த 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி நாட்டின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடந்த 29.04.2018 திகதி திங்கட்கிழமை அன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஓர் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வு ஆலய நித்தியகுரு சிவஸ்ரீ அங்குஷனாதக்குருக்கள் அவர்களினால் இடம்பெற்று வருகை தந்த அனைவரினாலும் தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அனைவரினாலும் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய நித்தியகுரு சிவஸ்ரீ அங்குஷனாதக்குருக்கள், பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, திருக்கோவில் பிரதேச செயலகத்தினர், ஆலய வண்ணக்கர் திரு வ.ஜயந்தன், ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ், ஆலய பரிபாலன சபை செயலாளர் ஏ.செல்வராஜா , சத்ய சாயி சேவா நிலையத்தினரும், திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையத்தினரும் ,பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.