சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை வழியாக வேகமாக சென்றுகொண்டிருந்த காரில் இருந்து தவறி விழுந்த 2 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
காரின் பின்புற கதவு தானாக திறந்துக்கொள்ள, உருண்டு சாலையில் விழுந்த அந்த குழந்தை பின்னால் வந்துகொண்டிருந்த கார் டிரைவர் சாதுர்யமாக பிரேக் போட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
குழந்தை கீழே விழுந்ததை அறியாமல் காரை ஓட்டிச்சென்ற குழந்தையின் பாட்டனார், பின்னர் பதறியடித்துக் கொண்டு ஓடிவர, பின்னால் வந்த காரில் இருந்து கீழே இறங்கிய ஒருபெண் குழந்தையை பாதுகாப்பாக அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் பின்னால் வந்துகொண்டிருந்த காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.
அந்தப் பெரியவரின் காரின் பின்பகுதி மீது சில நாட்களுக்கு முன்னர் வேறொரு வாகனம் மோதிவிட்டதாகவும், அன்றிலிருந்து காரின் பின்பக்க கதவின் தாழ்ப்பாள் சரியாக இயங்காததால் கார் வேகமாக சென்ற போது கதவு தானாக திறந்துகொண்டு, அந்தக் குழந்தை சாலையில் உருண்டு விழுந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது