போர்க்குற்ற விசாரணையின் பின்னர், இலங்கையில் நீதியை நோக்கி நகர்வதற்கு, உயர்மட்ட சிறப்பு கலப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமையாளர் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த உயர்மட்ட விசேட நீதிமன்றத்தினுள் சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுனர்கள், சட்ட வல்லுனர்கள், மன்றும் விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
2004ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையின்படி இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைகளுக்கு பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அடிசாரி, நியூஸிலாந்தின் முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி சில்வியா காட்ரைட், பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் அஸ்மா ஜஹான்கிர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக்குழு இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ள கடந்த அரசாங்கம், அனுமதிக்காத நிலையில் இலங்கைக்கு வெளியில் இருந்தே, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், இன்று அந்;தக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹூசனால், ஐக்கிய நாடுகளின் ஜெனீவா அமர்வுக்கு வெளியில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை வெளியிட்ட ஆணையாளர், கடந்த 2002ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும்; இடைப்பட்ட காலப்பகுதியில்; இலங்கையில்;, இரண்டு தரப்பினரும்; பாரிய யுத்த குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் போர்க்குற்றத்தை விசாரணை செய்யும் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான சட்டமுறைகளை இலங்கை கொண்டிருக்கவில்லை என்றும்; அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான உரிய முறைமைகளும் நாட்டில்; இயங்குவதில்லை என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள்,குறிப்பாக வகைதொகையின்றி ஏவப்பட்ட எறிகணைகள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், திட்டமிடப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவங்கள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சித்திரவதைகள், சிறார்களை போருக்கு சேர்த்துக் கொண்டமை மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் அறிக்கையில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான கொலைகள் 2002 – 2011ஆம் இடைப்பட்ட காலப்பகுதியினில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு தரப்பினருடன் தொடர்பைக்கொண்டுள்ள ஆயுதக்குழுக்களும் இவற்றில் சம்பந்தப்பட்டுள்ளன
பாதுகாப்பு படைத்தரப்பினர் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்ட ஆயுதக்குழுக்களினால் தமிழ் அரசியல்வாதிகள், மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண பொது மக்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக பாதுகாப்பு படைத்தரப்பினரின் முன்னிலையில் சோதனை சாவடிகளில் மற்றும் இராணுவ முகாம்களில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தவிர, இறுதி யுத்தத்தின் போது பிடிபட்டவர்கள், சரணடைந்தவர்களும் இதே நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மற்றும் நில கண்ணிவெடி தாக்குதல்கள் மூலம் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களை கொலை செய்துள்ளதுடன்;, அரச அதிகாரிகள், கல்விமான்கள் தமிழ் அரசியல்வாதிகள் ஆகியோரையும் கொலை செய்தனர்.
விசாரணைகள் போது பாலியல் வன்புணர்வு தொடர்பாக திடுக்கிடவைக்கும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படைத்தரப்பினர் கொடூரமான வகையில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குள், தடுத்து வைக்கப்படும் தோரணையில் பெண்கள் போல வேடமிட்ட ஆண்கள் அனுப்பப்பட்டு, அவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டமை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிய 30 பாதிக்கப்பட்டவர்களினால் வழங்கப்பட்ட சாட்சியக்கூற்றுக்கு அமைய சித்திரவதை செய்யப்படும் போது பாலியல் வல்லுறவு கொள்கையாக இடம்பெற்றுள்ளதே அன்றி இங்கொன்றும் அங்கொன்றாகவும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
விசாரணை செய்யப்படும்போது மட்டும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதில்லை, விசாரணை நடைபெறாத நிலையிலும் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளன.
போரின் முன்னரும், போருக்கு பின்னரும் பாலியல் வன்புணர்வை மேற்கொண்ட ஒரு பாதுகாப்பு படைத்தரப்பினர் கூட தண்டிக்கப்படவில்லை என்ற விடயம், விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பல தசாப்த காலமாக காணாமல் போகச்செய்யப்படல் சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.
அதேபோன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படைத்தரப்பினருக்கும் இடையில் 26வருடங்களாக மோதல்கள் இடம்பெற்றபோதும் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
காணாமல் போகச்செய்யப்படுவது என்பது திட்டமிடப்பட்ட தாக்குதல் முறை என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இறுதிப்போரின்பின்னர் போருடன் நேரடியாக தொடர்பில்லாதவர்களும் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டனர்.
அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விசாரணைகளை மேற்கொள்ளும் பாதுகாப்பு படையினர், பரந்தளவில் குரூருமான வகையில் சித்திரவதைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட சில முகாம்களில் சித்திரவதைக்கான உபகணரங்களை கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதன்மூலம் திட்டமிட்ட முறையில் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெற்றமைக்கு சான்றுகள் கிடைத்துள்ளன.
சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட அறைகளின் சுவர்களில் இரத்தக்கறைகள் படிந்திருந்தமையையும் விசாரணையாளர்கள் அவதானித்துள்ளனர்.
சிறுவர்கள், பலாத்காரமாக போர் நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டனர்.
இறுதிப்போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் பலாத்காரமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்;.
விடுதலைப்புலிகளும், 2004ஆம் ஆண்டு தமது இயக்கத்தில் இருந்து பிரிந்து அரசாங்கத்துடன் செயற்பட்ட கருணா குழுவினரும் பரந்தன் பகுதியில் சிறுவர்களை சேர்த்து அவர்களை போரில் ஈடுபடுத்தினர் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவற்றை போர்க்குற்றமாக கருதமுடியும் என்றும் விசாரணை அறிக்கை குறிப்பிட்;டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டக்கோட்பாடுகளுக்கு ஏற்ப இடம்பெறவில்லை.
மக்கள், செறிந்து வாழ்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு இடஙகளில் அரசாங்கம் உருவாக்கிய போர் சூன்ய பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனைகள், மனிதாபிதமான உதவி வழங்கும் நிலையங்கள், போன்றவற்றின் மீது அரசாங்கப்படைகள் எறிகனை தாக்குதல்களை நடத்திய விடயம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
போருடன் சம்பந்தப்படாத பொதுமக்கள் மீது தாக்குல்களை நடத்துவது பாரதூரமான சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல் என்பதால் இவற்றை போர்க்குற்றமாக கருதலாம்.
போர் இடம்பெற்றபோது பலாத்காரமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இருந்துக்கொண்டு, தமிழீழு விடுதலைப்புலிகள், தாக்குதலை மேற்கொண்டமை மனிதாபிமான சட்டமீறலாக கருதலாம்.
ஆனாலும் தமிழீழு விடுதலைப்புலிகளின் இந்த செயலை காரணம் காட்டி, அரசாங்கம்,பொதுமக்களை மனிதாபிமான சட்டங்களின்கீழ் பொதுமக்களை தட்டிக்கழித்திருக்கமுடியாது.
வடமாகாணத்தின் வன்னிப்பிரதேசத்துக்கு உணவு, உதவி மற்றும் மருத்துவப்பொருட்கள் சென்றடைவது தடுக்கப்பட்;டுள்ளது.
இந்த செயலானது பொதுமக்களை பட்டினியாக்கி அதனை போர்முறையாக பிரயோகித்திருக்கலாம் என்பது வெளிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களை பட்டினியாக்குவதை போர்முறையாக பயன்படுத்தியிருந்தமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அதனை போர்க்குற்றமாக கருதமுடியும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இடம்பெயர்ந்தோக்கான முகாம்களில் பொது மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கான நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது, முகாம்களில், முன்னைநாள் விடுதலைப்புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக பிரயோகிக்கப்பட்ட வழிமுறைகள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளன.
அது மட்டுமல்லாது அந்த மக்களை துஸ்பிரயோகங்களுக்கும் துன்பத்துக்கு உட்படுத்துவதற்கும் வழியேற்படுத்தப்பட்டது.
கி;ட்டத்தட்ட 3இலட்சம் அளவான இடம்பெயர்ந்தோரின் சுதந்திரமும் மீறப்பட்டது.
இடம்பெயர்ந்தோர் தமிழர்கள் என்பதால் அவர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள் என்று நம்புவதற்கான காரணங்கள் உள்ளன.
இதன்மூலம் தமிழ் மக்கள் பாரபட்சத்துடன் மனிதநேயத்துக்கு எதிரான வகையில் நடத்தப்பட்டார்கள் என்று கருதப்பட இடமேற்பட்டுள்ளது என்று சர்வதேச விசாரணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அறிக்கையில், பல வருடங்களாக இடம்பெற்று வந்த உண்மைகளை மறுத்தல், மூடிமறைத்தல், உடனடி விசாரணைகளை மேற்கொள்ளாமை, விசாரணைகளை இடைநிறுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நீதிக்காக செயற்படுவோருக்கும் எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பன ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பொறிமுறைகள், தொடர்ச்சியாக கண்ட தோல்வியின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், கோபம், ஐயம் மற்றும் அவநம்பிக்கை கொண்டு;ள்ளமையை விசாரணையாளர்கள் அவதானித்துள்ளனர்.
படைத்தரப்பினர் மேற்கொண்ட குற்றச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமையானது, கட்டமைப்பின் பலவீனத்தை சுட்டிக்காட்டுவதாகவும் விசாரணையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமை மீறல்களை இழைக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் சட்டவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியன இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பொறுப்புக்கூறலை ஒரு உள்நாட்டு பொறிமுறையின் மூலம் கையாள்வதாக இலங்கையின் புதிய அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி பாராட்டத்தக்கது.
ஆனால், துரதிஸ்டவசமாக, இலங்கையின் குற்றவியல் நீதிப்;பொறிமுறை இதனை செயற்படுத்துவதற்கு திறனற்றதாக உள்ளது என்று மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டம், போர் மற்றும் குற்றமிழைத்தர்கள் தண்டனையில் இருந்து தப்பியமை ஆகியவற்றினால் இலங்கையின் நீதித்துறையும் பாதுகாப்புத்துறையும் சிதவடைந்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆணையாளர் செய்ட்ராட் வரவேற்றுள்ளார்
அதேநேரம், மனித உரிமைமீறல்கள் காரணமாக ஆழமாக வேரூன்றியுள்ள அடக்குமுறை கட்டமைப்புக்கள் மற்றும் நிறுவன கலாசாரங்களை ஜனாதிபதி அகற்றவேண்டும் என்று ஆணையாளர் கோரியுள்ளார்.
இந்த செயற்பாடுகளுக்காக அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படும் விதங்களில் அடிமட்டம் முதல் உயர்மட்டவரை மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்று ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!