முப்பதாண்டுகளுக்கும் மேலாக, தம்பிலுவில் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொம்புமுறி விளையாடற் பெருவிழா, இவ்வாண்டு மீளவும் கோலாகலமாக ஆரம்பமாக இருக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மாலை, போர்த்தேங்காய் உடைத்தலுடன் ஆரம்பமாகும் இப்பெருவிழா, ஒன்பது நாட்கள் தொடர்ந்து, ஆகஸ்ட் 30ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இனிதே நிறைவுற இருக்கின்றது.35 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இடம்பெற்று வந்த கொம்புமுறி விளையாட்டு, இறுதிச் சில ஆண்டுகளில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத சம்பவங்கள், மற்றும் யுத்தகாலச் சூழல் முதலான பல்வேறு காரணிகளால், ஊர்கூடி, கொம்புமுறி விளையாட்டை இனி நடத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. எனினும், கண்ணகியைப் போற்றும் பக்திநிறைந்த சடங்காகவும், ஊரே விழாக்கோலம் பூண்டு கொண்டாடும் சுவாரசியமிக்க போட்டி நிகழ்ச்சியாகவும், புகழ்பெற்று விளங்கிய கொம்புமுறி விளையாட்டு, கிழக்கிலங்கையின் ஏனைய பகுதிகளிலும் முற்றாக அருகிப்போய், கொம்புமுறிப்பு என்றால் என்னவென்றே அறியாத இரண்டு தலைமுறைகளைக் கடந்துவந்து விட்டது.
![]() |
| கடந்த ஆண்டு இடம்பெற்ற கொம்புமுறிப்புக் கலையாடல் |
இந்நிலையிலேயே அவ்விளையாட்டை இக்காலச் சந்ததியினருக்கு மீளறிமுகம் செய்யும் வகையில், கடந்த ஆண்டு தம்பிலுவில்லில் இடம்பெற்ற கண்ணகி விழாவில், கொம்புமுறி விளையாட்டு அரங்க ஆற்றுகை நிகழ்வாக நடத்தப்பட்டு, ஊர்மக்களைப் பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
அதைத் தொடர்ந்து, கொம்புவிளையாட்டை இனி மீண்டும் ஆண்டுதோறும் தொடரவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதால், பல்வேறு முன்னேற்பாடுகளுடன், வழக்கமான விளையாட்டுக் கால அளவை ஒன்பது நாட்களாகக் குறைத்து, சில மரபுகளை மாற்றியமைத்து, இவ்வாண்டுக் கொம்புமுறி விளையாட்டு வரும் நாட்களில் இடம்பெற இருக்கின்றது.
![]() |
| பாணமையில் இன்றும் தொடரும் கொம்புமுறி (நன்றி: invokingthegoddess.lk) |
கொம்புமுறி விளையாட்டு மிகுந்த சுவாரசியமானது. இன்றைக்கு நம் பிரதேசத்தில், அம்மன் கோயில் சடங்கு, திருக்கோவில் தீர்த்தம், கதிர்காமப் பாதயாத்திரை ஆகிய மூன்று பருவகாலங்களும், சிறியவர் முதல் பெரியவர் வரை, எத்தகைய குதூகலத்தை ஏற்படுத்துகிறதோ, அதே குதூகலத்தை ஏற்படுத்தும் காலவேளையாக, ஒருகாலத்தில் கொம்புமுறிப்பும் விளங்கி இருந்திருக்கின்றது.
கண்ணகிக்குரிய தென்சேரிக்கும், கோவலருக்கு(அல்லது சாமிக்கு)ரிய வடசேரிக்கும் தான் போட்டி நிகழும். பழைய வடசேரிக் கோவில், இன்று சித்திவிநாயகர் ஆலயமாக விளங்குவதால், தற்போது அதன் வடபுறமாக தற்காலிக வடசேரிக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கொழுகொம்பு, தட்டுக்கொம்பு, கூடாரக்கொம்பு, ஏடகக்கொம்பு, தண்ணீர்க்கொம்பு என்பன இதன்போது முறிக்கப்பட இருக்கின்றன. கரையாக்கன் அல்லது வெட்சி என்று சொல்லப்படும் "எக்சோரா" தாவரத்தின் வலிமைமிகுந்த கிளைகளே இந்தக் கொம்புகளைச் செய்யப் பாயன்படும்.
ஏனைய ஊர்களிலிருந்து, தம்பிலுவில் கிராமக் கொம்புமுறிக்கு, சில வேறுபாடுகள் உண்டு. ஆண்களே பங்கெடுக்கும் கொம்புவிளையாட்டில், பெரும்பாலும் தந்தையுடனேயே மகனும் இருக்கும் சூழ்நிலை ஏற்படுவதால், ஏனைய ஊர்களில், கொம்புமுறிப்பில் மட்டும், தந்தையின் சேரியே மகனின் சேரியாகக் கருதப்பட்டது. தம்பிலுவில்லிலோ, அதிலும் கூட, தாயின் சேரியே மகன் சேரி என்பது உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மற்றையது, இவ்வூரில் பயன்படும் செவ்வாய்க் குற்றியின் குறுகிய உயரம் ஆகும். செவ்வாய்க்குற்றியும் இல்லாமல் கொம்புமுறி விளையாடிய கிராமங்களும் உண்டு. (உ-ம்: களுதாவளை, மண்டூர்)
![]() |
| பெரும்பாலான கிராமங்களில் பயன்படும் உயரமான செவ்வாய்க்குற்றி (இடப்புறம் உள்ள "தாய்மரம்" எனும் அமைப்பு தம்பிலுவில் கொம்புமுறியில் பயன்படுவது இல்லை) |
![]() | |||
| தம்பிலுவில்லில் பயன்படும் உயரம் குறைந்த செவ்வாய்க்குற்றி |
முதியவர்கள் பலர் பகிர்ந்து கொண்ட, கொம்புமுறிப்பு நினைவுகூரல்கள் சுவாரசியமானவை. கொம்பை முறிக்க விடாமல், மாறிமாறி இடம்பெற்ற மாந்திரீகப் போட்டிகளும், ஏடகக்கொம்பு முறிப்பில், ஏட்டிக்குப் போட்டியாக அலங்கரிக்கப்பட்ட இருசேரி ஏடகங்களும், எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் பேசப்பட்ட மின்மோட்டார் பொருத்திச் சுழன்றாடிய தென்சேரி ஏடகமும், கொம்புமுறித்த காளையரின் வீரத்தில் மயங்கி கன்னியர் மாலையிட்ட காதல் கதைகளும், கொம்புவிளையாட்டால், கணவன் - மனைவியருக்கிடையே ஏற்படும் ஊடல்களும், ஊடல்கள் முற்றிய பெரும் குடும்பக் களேபரங்களும், என்று அந்தப் பட்டியல் நீள்கின்றது!
எல்லாவற்றையும் கேட்கக் கேட்க ஆர்வம் தாங்கமுடியாமல் இருக்குமே? அதற்கென்ன, எதிர்வரும் ஒன்பது நாட்களும் தான் அனுபவிக்கப் போகிறீர்களே! புலம்பெயர்ந்தோர்? கவலையெதற்கு? இந்த முகநூல், நம் இந்த வலைத்தளம் எல்லாம் என்னத்துக்கு இருக்கிறது? :-)
இறுதியாக ஒன்றே ஒன்று!!
கொம்புமுறிப்பு ஒரு விளையாட்டே எனும் போதும், அது கண்ணகி வழிபாடு சார்ந்து, பயபக்தியுடன் நிகழ்த்தும் கலையாடல்களில் ஒன்றாகவே பண்டுதொட்டு விளங்கி வந்திருக்கின்றது. என்றைக்கு அது, அந்நிலையிலிருந்து கீழிறங்கி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் வெறும் விளையாட்டு என்ற நிலைக்குக் தள்ளப்பட்டதோ, அன்றிலிருந்து தான் கொம்புமுறி முற்றாக நிறுத்தப்பட்டது என்று முதியவர்கள் பெருமூச்சுடன் கூறுகின்றார்கள்.
கொம்புவிளையாட்டு, முழுக்க முழுக்க குலங்களில் தங்கியிருப்பது! மதப்பற்று, இனப்பற்றை விட மோசமான குடிப்பற்று, இந்தக் கொம்புமுறி விளையாட்டுக் காலம் முடியும் வரை தலைவிரித்தாடுவதைத் தவிர்க்கமுடியாது. வேகவேகமான இயந்திர யுகத்துக்கு இசைவாக்கமடைந்த, போனதலைமுறைகளை விட சகிப்புத்தன்மை குறைவான தலைமுறை நம்முடையது! முன்னாயத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும், கொம்புமுறிப்புக்கே சிறப்பான வசைப்பாடல்கள், மச்சினச் சண்டைகளால் இளைஞர்கள் பொறுமையிழந்து விடக் கூடாதே என்ற அச்சம் பல மூத்தவர்களிடம் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இறுதிக் கொம்பு விளையாட்டின்போது ஏற்பட்ட பெரும் குழப்பத்தில், கொம்புகள் நடுவீதியில் கேட்பாரின்றி அனாதரவாய்க் கிடந்ததையும், அடுத்த சில ஆண்டுகளுக்கு நம்மூர் கண்ட பேரழிவுகளையும் நினைத்துப் பார்த்து உடல்சிலிர்ப்பவர்கள் அவர்களிற் பலர்!
வரும் ஆண்டுகளிலும் கொம்புமுறிப்பைத் தொடர்ந்து நிகழ்த்துவதா, இல்லையா என்பதை இனிவரும் ஒன்பது நாட்கள் தான் தீர்மானிக்க இருக்கின்றன. கொம்புமுறிப்பில் பங்குபற்றும் நம்மவர்களும், கூடவே கண்ணகைத்தாயாரும் மனம் வைக்கட்டும்!
![]() |
| இறுதி நிகழ்வான "பள்ளுக்கு வளைதல்" |





