பொத்துவில் வீதி, காஞ்சிரங்குடா பிரதேசத்தில் நேற்றிரவு சுமார் 8.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பி.பத்மநாதன் (42 வயது) சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்று - 9, சிங்கள மகா வித்தியாலய வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாகிய இவர், நேற்றிரவு காஞ்சிரங்குடா பிரதான வீதியில் அக்கரைப்பற்று நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகு ஒன்றில் தலை மோதுண்டு படுகாயமடைந்திருந்தார். பின்னர் உடனடியாகத் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டநிலையில் இன்று (11) மாலை சிகிச்சை பலனின்றி மரணமானார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தரான இவர், தற்போது கண்ணகிபுரம் - 1 மற்றும் அக்கரைப்பற்று - 9 கிராமசேவகர் பிரிவுகளுக்கான கிராமசேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
