திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட மீள்குடியேற்றப் பகுதியிலுள்ள தங்க வேலாயுதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அமரர் க.குகதாஸ் ( கனடா ) அவர்களுடைய ஞாபகார்த்தமாக அவரது மனைவி உஸா குகதாஸ் ரூபா எட்டு இலட்சம் செலவில்
குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன் திறப்புவிழா வெள்ளியன்று பாடசாலை அதிபர் வி.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் சுகிர்தராஜா வவுனியா பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர்.சத்தியமூர்த்தி கோட்டக்கல்வி அதிகாரி வி.ஜயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நீர் விநியோகத்தை அமரரின் சகோதரர் க.கமலதாஸ் வைபபரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குடிநீர் வழங்குவது கோடி புண்ணியம்
ஒருவர் மரணித்துவிட்டால் 8, 31, ஆண்டு என்று மரணித்தவர்களின் ஞாபகார்த்தமாக கிரியைகள் செய்வது வழமையாகும். ஆனால் சிலர் அத்தகைய ஞாபகார்த்தமாக சமூகத்திற்கு ஏதாவது செய்து அவரின் ஆத்மசாந்திக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்படுவர்.
அந்தச் சிலரில் ஒருவராக பெரியகல்லாற்றைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் திருமதி உஸா குகதாஸ் என்பவர் ஓர் அர்ப்பணிப்பைச் செய்திருக்கின்றார். யுத்தத்தால் வெளியேறி மீண்டும் சுயமாக பல்வேறு அசௌகரியங்களுக்கும் யானைகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் வாழும் மக்களைக் கொண்ட கிராமம்தான் தங்கவேலாயுதபுரம். அங்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற ஒரேயொரு பாடசாலை அதிபரின் அர்ப்பணிப்புடன் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இயங்கி வருகின்றது. என்பதைவிட அதிபரின் முழு முயற்சியால் இயக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மையாகும்.
அப்பாடசாலை மாணவர்களுக்கு அங்கு குடிநீர் வசதி கூட இல்லை. அக்கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கும் இதே நிலைதான். எனவே இருசாராரும் பயன்பெறும் வகையில்; அந்தப் பாடசாலைக்கு அமரர் குகதாஸ் நினைவாக தனிப்பட்ட முறையில் பாரிய நிதிப் பங்களிப்புச் செய்து நீர் விநியோகத் திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்துள்ளமையானது அக் கிராம மக்களைப் பூரிக்கச் செய்துள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் செயற்பாடு இது. குடிநீர் வழங்குவது கோடி புண்ணியத்திற்கு ஒப்பானது.
ஒரு உதவி செய்யும் போது பொருத்தமான இடத்தில் பொருத்தமான நேரத்தில் செய்தால்தான் அது பெறுமதிமிக்கதாக அமையும். அதுவும் அவ் உதவி முழுமையானதாக இருக்க வேண்டும். அதற்கேற்றாற்போல் கிணறு, நீர்த்தாங்கி, நீர் விநியோக ஒழுங்கு மற்றும் மின் விநியோகம் என்பனவற்றை நிலையாக முழுமையாக பொருத்தமான இடத்தில் அமைத்துள்ளமையானது இறந்தவரின் ஆத்மசாந்தியை நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்கும்.
கணவனை இழந்த துயரத்தின் மத்தியிலும் தங்கவேலாயுதபுரம் மக்களின் துயர் துடைக்க தூய்மையாகச் செயற்பட்டதன் மூலம் அப்பகுதி மக்கள் ஒவ்வொருவரும் நீர் அருந்தி தாகசாந்தி பெறும் போதெல்லாம் அமரர் குகதாஸின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பது அன்னாரின் குடும்பத்தினருக்குச் செய்யும் பிரதியுபகாரமாக அமையும் என ' வற்றி நியூஸ் ' எதிர்பார்க்கின்றது.
அத்துடன் இந்த அரியபணி சிறப்பாக நிறைவுற பக்கபலமாக இருந்த அதிபர் வி.முரளிதரன், அமரத்துவம் அடைந்தவரின் சகோதரர் க.கமலதாஸ் மற்றும் சகலன் க. சுரேஸ் ஆகியோரின் பங்களிப்பையும் நாம் பாராட்டுகின்றோம்.
இத்தகைய பணிகளை இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக வசதியுள்ளவர்கள் தொடர வேண்டும் என்பதே எமது பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பொறுத்தவரை முக்கிய தேவை என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். வசதியற்றவர்களின் வயிற்றில் பால் வார்க்கும் இத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ளோரை மனதார வாழ்த்துவதுடன் அமரர் க.குகதாஸ் ஆத்மசாந்திக்கு பிரார்த்திப்போமாக.