திருக்கோவில் - மாவட்ட வைத்தியசாலை ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாகக் குறைகளுடன் இயங்கி வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 110 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்துமாறு பல தடவைகள் கிழக்கு மாகாணசபையில் அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், இதுவரை அந்தத் தீர்மானம் எவையும் செயற்படுத்தப்படவில்லை என இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தாண்டியடி முதல் தம்பட்டை வரையிலான 22 கிராம சேவகர் பிரினை உள்ளடக்கிய திருக்கோவில் பிரதேசத்தில், சுமார் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவத் தேவையினை நிறைவு செய்யும் வைத்தியசாலையாக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையே இருந்து வருகின்றது.
ஆயினும், இந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லை என்பதால், ஆபத்தான நிலையில் இந்த வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படும் நோயாளர்களை - பல மைல் தூரமுள்ள அம்பாறை அல்லது கல்முனை வைத்தியசாலைகளுக்கே கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.
இதனால், உடனடியாக தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய நோயாளர்கள் - கால தாமதத்தினால் உயிராபத்தினை எதிர்நோக்கும் அபாயமும் உள்ளது.
இந்த வைத்தியசாலைக்கென 6 ஏக்கருக்கும் அதிகமான காணி இருந்தும் - தேவையான கட்டிட வசதிகள் இல்லை.
இங்கு நாளொன்றுக்கு 250க்கும் அதிகமான வெளி நோயாளர்கள் சிசிக்சை பெறுவதற்காக வருகை தருகின்றபோதும், வெளி நோயாளர் பிரிவுவுக்கான இடவசதிகள் போதாமலுள்ளன.
இதேவேளை, இந்த வைத்தியசாலையில் ஒவ்வொரு மாதமும் பல பிரசவங்கள் நிகழ்கின்றபோதும், இந்த வைத்தியசாலைக்கென இதுவரை பெண் மகப்பேற்று நிபுணர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைத்தியசாலையில் 06 வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் 04 வைத்தியர்கள் மட்டுமே கடமையாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்கு ஏனைய ஊழியர்களின் தேவையும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே, கோவில் மாவட்ட வைத்தியசாலையினை தரமுயர்துவதோடு, அந்த வைத்தியசாலையின் வளப்பற்றாக் குறையினையும் நிறைவேற்றி வைக்குமாறு இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

