Contact Form

Name

Email *

Message *

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தைப்பூசப் பெருவிழா

By- Thulanch உலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களால் எதிர்வரும் 2012.02.07 செவ்வாய்க்கிழமை அன்று தைப்பூசப் பெருவிழா அனுட்டிக்கப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் ஒன்றான பூச நட்…

Image
By- Thulanch
உலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களால் எதிர்வரும் 2012.02.07 செவ்வாய்க்கிழமை அன்று தைப்பூசப் பெருவிழா அனுட்டிக்கப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் ஒன்றான பூச நட்சத்திரம், தை மாதத்தில் கூடி வரும் நாளே “தைப்பூசம்” எனப்படுகிறது. அந்நாள், வியாழக்கிழமையும் சித்தயோகமும் கூடிவரும் நாளாயின் இன்னுஞ் சிறப்பு. அத்தகைய ஒரு தைப்பூசத்திலே தான், புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்), பதஞ்சலி ஆகிய முனிவர்களுக்காக, சிவபிரான் தில்லையில் ஆனந்தக்கூத்தாடினார் என்று, ஆறுமுகநாவலர், தனது “சிதம்பர மான்மியம்” எனும் நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

தைப்பூசம் புனிதமான ஒரு நாளாகக் கருதப்படுகிறது. அன்று ஆரம்பிக்கும் எல்லாச் செயல்களுமே வெற்றியில் முடியும் என்பதால், சிறுவர்களுக்கு ஏடுதொடங்கல், பெண்பார்க்கச் செல்லல், பெண்குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்ற மங்களகாரியங்கள் இந்நாளில் நடந்தேறுகின்றன.

தைப்பூசம், தென்னாடுடைய சிவனார் தலங்களிலும், தமிழரின் தெய்வமாம், முருகன் ஆலயங்களிலும் சிறப்புப் பெறுவதன் மூலம், இது பன்னெடுங்காலமாக தமிழர் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கி.பி 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞான சம்பந்தப் பெருமான், பூம்பாவையை உயிர்ப்பிக்கப் பாடிய பதிகத்தில்,
“மைப்பூசு மொண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்று பாடுவதன்மூலம், அவர் காலத்திற் கூட தைப்பூசம், புகழ் பெற்றிருந்தமையை அறிய முடிகிறது.

ஈழத்தவர் மத்தியில், வயலில் அறுவடையை ஆரம்பிக்கும் நிகழ்வான, “புதிரெடுத்தல்”(புதிதெடுத்தல்), பெரும்பாலும், தைப்பூசமன்று நிகழ்வது வழமையாகும். மேலும், பட்டிப்பொங்கல் எனப்படும் மாட்டுப்பொங்கலை, ஈழத்தமிழர் பழங்காலந்தொட்டு, தைப்பூசமன்றே கொண்டாடி வருவதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமை பெற்ற தைப்பூசப் பெருவிழா வழமை போல் இம்முறையும் உகந்தமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில், அனுட்டிக்கப்பட திருவருள் கைகூடியுள்ளது. இதையொட்டி, இவ்வாண்டு, பாற்குடப்பவனி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அன்று காலை, வள்ளிமலையில் அமைந்துள்ள வள்ளியம்மன் ஆலயத்திலிருந்து, பாற்குடப்பவனி ஆரம்பித்து முருகன் ஆலயத்தை வந்தடையும். அடுத்து ஆலயத்தில், “நீராட்டு ஓமமும்”(ஸ்நபன ஹோமம்), பாலாபிடேகமும் இடம்பெறும். மேலும், அன்று மாலை திருவிளக்குப்பூசையும், சுவாமி திருவீதியுலாவும் இடம்பெற இருக்கின்றன.

தைப்பூசப் பெருவிழா நிகழ்வுகள் யாவும். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் இளைப்பாறிய அதிபர், திரு வேலாப்போடி இலட்சுமிசுந்தரம் அவர்களின் உபயத்தில் நிகழவுள்ளதுடன், ஆலயக் கிரியைகள், பிரதம குரு, சிவஸ்ரீ..க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் நிகழும்.

உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்துக்கு, விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதுடன், அன்று மதியம், அன்னதானமும் நிகழவுள்ளதாக உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய திருப்பணிச்சபைச் செயலாளர் திரு. கு. சிறிபஞ்சாட்சரம் தெரிவித்துள்ளார்

---

You may like these posts

Comments