கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்த மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும். முதல்நாள் திருவிழா ஆலய வண்ணக்கராலும் ஏனைய திருவிழாக்கள் திருக்கோவில்,அக்கரைப்பற்று,காரைதீவு,பொத்துவில்,பாணமை போன்ற பிரதேச மக்களாலும் நடத்தப்படும்.7 ஆம் திகதி வியாழக்கிழமை சங்காபிஷேகமும், 16 ஆம் திகதி தேர்த்திருவிழா மயில் திருவிழா, மலைத்திருவிழா ஆகியவையும் இடம்பெறும்.

உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.கு. சீத்தாராம் குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,சிவஸ்ரீ சீ.கு. கௌரிசங்கர் சர்மா,சீ.கு.கோவர்த்தன சர்மா,ஆ.கோபிநாதசர்மா ஆகியோர் கிரிகைகளை நடத்தவுள்ளனர். இவ் ஆலய உற்சவகாலத்தில் கொடியேற்ற தினத்தன்று காரைதீவு உகந்தமலை யாத்திரிகர் சங்கத்தினரின் அன்னதானமும், ஆலையடிவேம்பு இந்துமாமன்றம்,அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் போன்றவையும் பொதுமக்களும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, அடியார்களின் போக்குவரத்து வசதிகருதி அக்கரைப்பற்று,கல்முனை,பொத்துவில் போன்ற பிரதேசங்களில் இருந்து விசேட போக்குவரத்து சேவையை, இலங்கை போக்குவரத்துச்சபையும் தனியார் போக்குவரத்து சபையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஆலய வண்ணக்கரும் திருப்பணிச் சபையினரும் தெரிவித்தனர்.