
யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கோவில் பகுதிக்கு மேளவாத்தியத்திற்குள் வைத்து அம்மன் சிலையைக் கடத்திச் சென்ற ஒருவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதுடன், அம்மன் சிலையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த எதிரசூரிய தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தில் வைத்தே இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு வெண்கலத்தினாலான ஒன்றரையடி உயர அம்மன் சிலையும் மீட்கப்பட்டுள்ளது.திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்தில் மேள வாத்தியத்துடன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து வந்து தங்கியிருந்துள்ளார்.
ஆலயத்திலிருந்து வெளியே சென்ற இவரை நீண்டநேரம் காணாததையடுத்து புதன்கிழமை பகல் 2 மணியளவில் அவரின் மேளத்தை ஆலய நிருவாகிகள் தூக்கிப் பார்த்தபோது மேளம் பாரமாக இருந்ததையடுத்து சந்தேகம் கொண்டு பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.மேளத்தை பொலிஸார் சோதனையிட்ட போது அதனுள்ளிருந்து ஒன்றரையடி உயர வெண்கலத்தினாலான அம்மன் சிலையை மீட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரை கைது செய்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!