பொதுமக்கள் தமது பிரதேசங்களில் உள்ள கடற்கரையோரங்களை சுத்தமாக பேணி பாதுகாப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.இவ்வாறு செய்யாது விடுவோமேயானால் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான அழகான இயற்கை கடலோரம் அழிந்து போகும் அபாயம் ஏற்படும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை தம்பிலுவில் சிவன் கோவில் முன்றலில் இடம்பெற்ற தேசிய கடற்கரை சுத்தப்படுத்தல் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இத்தினமானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.அந்தவகையில் கடந்த 19ஆம் திகதி மேல் மாகாணத்தில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு இந்த விடயத்துக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதற்கு காரணம் தற்போது கடலோர சூழல் மிகவும் மாசடைந்து செல்வதாகும்.இதனை தடுக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் முதலில் விழிப்புணர்வு பெறவேண்டும். அந்தவகையில், இலங்கையில் மொத்த நிலப்பரப்பில் 8 மடங்கு கடலும்,கரையோரப் பிரதேசமாக இருக்கின்ற நிலையில் 1700 கிலோ மீற்றர் கடலோர நிலப் பிரதேசமாக பாவனைக்குரிய பகுதியாக கணிக்கப்பட்டுள்ளது.ஆனால் 688 கி.மீ.பயன்பாட்டு நிலப்பிரதேசமாக அமைந்தள்ளது. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் 110 கி.மீ தூரம் கடலோர பிரதேசமாக ஒதுக்கப்பட்டு 62 கி.மீற்றர் நிலப்பரப்பினை பயன்பாட்டுக்குரியதாக அமைந்தள்ளது.
இதனை பாதுகாக்க வேண்டிய கடமை இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் பொறுப்பாக இருக்கின்றது.
இதனை விழிப்பூட்டும் நிகழ்வாகத்ததான் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப் பிரதேச பொதுமக்கள் அழிந்து போகாத பொருட்களான பிளாஸ்டிக் போத்தல்கள்,இறப்பர் பொருட்கள் மற்றும் கடலோர சுற்றாடலை மாசுபடுத்தும் பொருட்களை தவிர்த்து நாமும் நமது எதிர்கால சந்ததியினரும் கடலோர இயற்கை வளத்தினை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.


