அரச ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடன் சேர்க்கப்படும்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலானது உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும்.கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி நல்லாட்சியை ஏற்படுத்தினார்.
அவருடன் இணைந்து செயற்படக் கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா அல்லது அவருடன் முரண்பட்டுக் கொள்ளக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதா என்பதனை தீர்மானிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படக் கூடிய நாடாளுமன்றை உருவாக்கினால் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாது. 2009ம் ஆண்டின் பின்னர் நாட்டில் அபிவிருத்தி; ஏற்படுத்தப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை பிரதமராக அறிவித்து பிரச்சாரம் செய்கின்றார், எனினும் கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.
மஹிந்தவை பிரதமராக்குவதில்லை எனவும் ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியிருந்தார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முன் பக்கத்தில் அதன் தலைவரின் புகைப்படம் பிரசுரிக்கப்படவில்லை.
கட்சியின் தலைவரது படத்தை முன் பக்கத்தில் போட முடியாத நிலைமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் அதிகாரிகள் சுயாதீனமாக கடமையாற்றக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடுகண்ணாவ, பொரளை மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அண்மையில் பங்கேற்று அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.