Contact Form

Name

Email *

Message *

எழிலான எங்களூரின் கடற்கரை?

எமது தளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை இடம்பெற்றிருந்தது .நமது ஊர் வட்டார வழக்கில் அது எழுதப்பட்டிருந்தாலும் அது சொல்லியிருக்கும் விடயம் மிகவும் கவலையையும்,…

Image
எமது தளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை இடம்பெற்றிருந்தது .நமது ஊர் வட்டார வழக்கில் அது எழுதப்பட்டிருந்தாலும் அது சொல்லியிருக்கும் விடயம் மிகவும் கவலையையும்,அதேநேரம்

அதிர்ச்சியையும் தருவதாக இருந்தது.
முதலில் இக் கட்டுரையை எழுதிய "ஊரவன்" அவர்களுக்கு நன்றியும்,
பாராட்டுகளையும் தெரிவிகின்றோம்.ஏழு வருடங்களுக்கு முன் ஆழிப்பேரலை
அழித்துச்சென்ற எங்கள் எழில்மிகு கடற்கரையை,எமது ஊர் கடல் அலைகள்
கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி, இன்று ஓரளவிற்காவது கடற்கரை இருக்கிறது
என்று சொல்லுமளவிற்க்கு வைத்திருக்கிறது.
தளத்தில்  இடம்பெற்றிருந்த கட்டுரையோடு எமது கடற்கரையின் அவலங்களை
காட்டும் புகைப்படங்களையும் பார்க்க முடிந்தது.இந்த மண் கொள்ளைபோவது
காலம் காலமாக எமது ஊரில் நடந்துவருவதுண்டு.எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது
நாங்கள் படிக்கும் காலத்திலே,உழவுஇயந்திரப்  பெட்டிகளிலும்,எருது மாட்டு வண்டில்களிலும்
மண் எடுத்து செல்பவர்கள் அநேகம்பேர்.அமரரான  எனது அத்தான் இராசநாயகம்(ஜே.பி)
அவர்கள் சமூக அக்கறையும்,தொலைநோக்கும் கொண்டவர்.அவர் இந்த மண் கொள்ளைபோவதை
கண்டிப்பவர்.எத்தனையோமுறை மண் ஏற்றிய இயந்திரங்களையும்,வண்டில்களையும் கடற்கரையிலே
சென்று மறித்து மண்ணை திரும்பவும் பறிக்க சொன்னவர்.இதை நான் உடனிருந்து பார்த்தவன்.
இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால்,இப்போது அங்கு நடந்து கொண்டிருக்கும்
இந்த மண்கொள்ளையை நிறுத்த,பலரும் செயலில் இறங்கவேண்டும். கடற்கரைக்கே சென்று
அவர்களிடமிருந்து மண்ணை பறிக்க வேண்டும்.மற்றப்படி பிரதேசசபை,அதிகாரிகள் கவனம்
எல்லாம் இரண்டாம் பட்சமே.
ஆக,ஊரில் உள்ள இளையோர் பலர் ஒன்று கூடி,ஒரு தீர்மானம் எடுத்து,ஊரின் எல்லைகளுக்குள் 
மண் களவாடல் படுவதை நிறுத்த ஆவன செய்யவேண்டும்.கட்டிட வேலைகளுக்கும்,மற்றும் 
தேவைகளுக்கும் மண் தேவை இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.அதை,பிரதேச சபையின் 
மூலமாக அனுமதிபெற்று,மண் எடுப்பதற்கான ஒரு பகுதியை ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒதுக்கி
அதற்கு கட்டணமும் அறவிடலாம்.இதை எம் மக்கள் விரைவாக செயல் படுத்த வேண்டும்.
இல்லையென்றால்,கட்டுரையாளர் சொன்னதுபோல்,நமது கடற்கரை இல்லாமல் போவதற்கு
கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.
அத்தோடு கடற்கரையை அசிங்கம் பண்ணுபவர்களையும்,குப்பை கூளங்கள் கொட்டுபவர்களையும்
எமது மக்கள் தண்டிக்க வேண்டும்.அந்தக் கடலும்,அந்தக் கரையும் இல்லாமல் எத்தனையோ
ஊர் மக்கள் ஏங்குகிறார்கள்.நமக்கு அழகான கடற்கரையை ஆண்டவன் தந்திருக்கின்றான்
அதை கட்டிகாக்க வேண்டியது நமது கடனே.இதை கருத்தில் கொண்டு ஊர் மக்கள் இயங்கவேண்டும் 
என்று புலத்தில் உள்ள எமது  ஊரின்  மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
==========================================================================================
எமது கடற்கரை பற்றி எனது "தேசத்தின் தென்றல்"என்ற இறுவெட்டில் 1999   ல் நான்
பாடியுள்ள ஒரு பாடலையும் இங்கு பதிவுசெய்கின்றேன்.
பாடல்:            எழிலான எங்கள் ஊரின் கடற்கரை
                           எனக்கென்றும் கனவில் வரும்..ஓ..ஓ ..
                           எனக்கென்றும் நினைவில் வரும்
                           எம்மூரின் மண்ணே உன்னை ..
                           மறப்பேனா நீ என் அன்னை....
                          காலைக் கதிரையும் கடலின் அலையையும்
                          கண்டுகளித்த என் கண்ணலவா...
                          கோவிலடியில கோடுகிழித்து நான்
                          ஓடித்திரிந்த என் மண்ணல்லவா
                          இன்று எல்லாமே இழந்து என் மண்ணை நினைத்து
                          இசைக்கின்ற பண்ணல்லவா....
                          காடுகளப்பிலும் சேனை வரப்பிலும்
                          கால்கள் பதித்திட்ட மண்ணல்லவா...
                          ஆற்று  மணலிலும் சேற்று வயலிலும்
                          ஆடித்திரிந்திட்ட மனசல்லவா-இன்று
                           வேற்று மனிதனாய் ஊரை பிரிந்து நான்
                           பாட்டு படிக்கின்ற நிலையல்லவா..
                          புகழும் சேரலாம் பொருளும் கூடலாம்
                          எதிலும்  நான் இங்கு உயரலாம்...
                          பதவி கிடைக்கலாம் பணமும் பெருகலாம்
                          பாதை புதிதாக திறக்கலாம்....
                          என்ன இருந்தாலும் எனது தமிழ் நெஞ்சில்
                          எந்தன் தாய்மண்ணே பெரிதல்லவா ....
------------------------------------------------------------------------------------------------------------
கோவிலூர் செல்வராஜன் =

You may like these posts