தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் வெகுசிறப்பாக இடம்பெற்று முடிந்தது.அதிபர் திரு.சோ.இரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.தி,கணேசமூர்த்தி அவர்கள் பிரதம அதிதியாகவும், திரு.எஸ்.செல்வராஜா (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்), திரு.கு.புஸ்பகுமார் (அம்பாறை மாவட்ட சனாதிபதி இணைப்பாளர்) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு – விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (2012.02.10) பிற்பகல் 2.30 மணியளவில், பாடசாலை மைதானத்திற்கு, தமிழர் பண்பாட்டு இன்னியத்துடன் (Cultural Band) அதிதிகள் வரவேற்கப்பட்டதை அடுத்து, மங்கள விளக்கேற்றல், மாணவர் உறுதிமொழி (சத்தியப்பிரமாணம்) எடுத்தல், தடகள நிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல் என்பனவும், இடைவேளையில் மேலைத்தேய இன்னியம் இசைத்தலும் அணிநடை மரியாதையேற்பும், வினோத உடைப்போட்டி என்பனவும் இடம்பெற்றன.
இடைவேளையை அடுத்து அஞ்சலோட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து, அதிதிகள் உரை, வீரர்களுக்கு (champions) கிண்ணம் வழங்கல் என்பன நிகழ்ந்தேறிய பின், போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு நன்றியுரை தெரிவிக்கப்பட்டதுடன் விளையாட்டுப்போட்டி இனிதே நிறைவுற்றது.
இவ்வருடப்போட்டியில் 463 புள்ளிகளைப் பெற்று வள்ளுவர் இல்லம் முதலாமிடத்தை தட்டிக்கொண்டதுடன், முறையே 441, 431 புள்ளிகளைப் பெற்று, இளங்கோ, கம்பர் ஆகிய இல்லங்கள் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டன.
ஒளிப்படங்கள்: இரா.நர்த்தனன்








Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!