இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த வரித் திருத்தங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களம் தெரிவித்தது.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட வரித்திருத்தங்கள் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், சில வரித்திருத்தங்கள் தற்போதும் நடைமுறையிலுள்ளது.
இருப்பினும், தேச நிர்மாண வரியில் இரண்டு தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நடைமுறைசார் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது பெறுமதி சேர் வரி 15 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
குறித்த வரி அதிகரிப்புக்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என தெரிவித்து அவை இதற்கு முன்னர் பிற்போடப்பட்டன.
இதனடிப்படையில், 15 வீதமான பெறுமதி சேர் வரித் திருத்தத்தை இன்றிலிந்து அமுல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படின் புதுவருடக் காலத்தில் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அதனைக் காரணமாகப் பயன்படுத்தக் கூடும் என நிதிக் கொள்கைத் திணைக்களம் தெரிவித்தது.
இதனால் புதுவருடக் காலத்தின் பின்னர் இந்த வரித் திருத்தங்களை அமுல்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.