
நமது பிரதேசத்தின், வரலாற்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சி!
தம்பிலுவில், முனையூர், தென்றல் வீதியினூடாகச் சென்ற – செல்கின்ற எவரும், இந்தக் குளத்தைக் காணாமல் சென்றிருக்க மாட்டீர்கள்! “இராமன் குளம்” என்பது தான், இந்தக் குளத்தின் இன்றைய பெயர்! ஆனால், நமது ஊருக்கே பெயர் தந்த குளம்; எத்தனையோ வரலாறுகளைக் கண்ட குளம் இது என்பது உங்களுக்குத் தெரியுமா??
இது கட்டப்பட்ட காலம், கி.பி 2ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என மட்டக்களப்பு மான்மியம் மூலம் அறியமுடிகிறது. எனினும் பின்னைய சில ஆராய்ச்சிகள், இதன் காலம் கி.பி 12ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என எண்ண வைக்கின்றன. ஆகக்குறைந்தது, இக்குளத்துக்கு 800 வருட வரலாறாவது இருக்கின்றது என அறியமுடிகின்றதல்லவா?
சரி, அப்படி என்ன வரலாறு இந்தக் குளத்துக்கு? மட்டக்களப்பு மான்மியமும், செவி வழிக் கதைகளும் அப்படி என்ன சொல்கின்றன?
சோழ நாட்டை ஆண்ட திருச்சோழன் மகள் “தம்பதி நல்லாள்” (திருச்சோழன் எனக் குறிப்பிடப்படுபவன் புகழ்பெற்ற சோழ மன்னன் திருமாவளவன் கரிகாற்சோழன் என்பர் சிலர்.); தம்பதி நல்லாள், கலிங்க நாட்டு (இன்றைய ஒரிசா மாநில) இளவரசனான “புவநேய கயபாகு” என்பவனை மணந்திருந்தாள். நீண்டநாளாக அவர்களுக்கு குழந்தைப்பாக்கியம் கிடைக்காததால், அறிஞர்களின் அறிவுரைக்கேற்ப, ஈழத்துக் கதிர்காமத்துக்கு பாதயாத்திரை வந்தார்கள்.
அந்தக்காலத்தில், “மட்டக்களப்பு” என்று அழைக்கப்பட்ட, இன்றைய சம்மாந்துறை – வீரமுனைக்கு அண்மையில் அவர்கள் வந்தபோது, மட்டக்களப்பு மன்னனான “பிரசன்னசித்து” என்பவன், அவர்கள் சோழநாட்டு அரச தம்பதிகள் என்பதை அறிந்து அழைத்து கௌரவித்தான். முடிந்தால், தங்கள் மட்டக்களப்பு தேசத்தின் முதலாவது திருப்படைக் கோவிலான நாகர்முனை முருகன் கோவில் (இன்றைய திருக்கோவில்) சிதிலமடைந்து கிடக்கிறது – அதை புனரமைத்துத் தரவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தான்.
அவனது கோரிக்கைக்கு இணங்கிய புவநேயகயபாகு அதற்கு இணங்கி, தன் மாமன் திருச்சோழனுக்கு ஓலை விடுத்தான்.
சில நாட்களில், புவநேயகயபாகுவின் திருப்பணியால், நாகர்முனைக்கோவில் பொலிவுடன் விளங்கியது. அதற்கு கும்பாபிடேகமும் நடத்தினான். அதன் நற்பலன் போல தம்பதிநல்லாளும் கர்ப்பம் தரிக்க, மன்னம் மகிழ்ந்து போனான்.
நீங்கள்கதிர்காமம் போகத் தேவையில்லை – என் நாட்டின் தென்பகுதியை உங்களுக்கு வழங்குகிறேன். அங்கேயே மாளிகை கட்டி நீங்கள் அரசாளலாம் என்று பிரசன்ன சித்து கோரிக்கை விடுத்தான்.
நாகர்முனை முருகனின் பேரருளால் தங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டப்போகிறது என்ற பெருமகிழ்ச்சியிலிருந்த சோழத் தம்பதியும் அதற்கு சம்மதித்தது.
தன் மட்டக்களப்பு தேசத்தின் தென் எல்லையில், தெற்கே மாணிக்ககங்கையும், கிழக்கே கடலும், வடக்கே பாணமைப்பற்றும், மேற்கே கடவத்தை என்ற ஊரும் எல்லையாயிருந்த பகுதியை அவர்களுக்கு பரிசளித்தான் பிரசன்னசித்து. அதுதான் இன்றைய உகந்தைப் பகுதி. சோழநாட்டிலிருந்து குடிகளை வரவழைத்து, காடு திருத்தி, மாளிகை கட்டி, அதற்கு ‘உன்னரசுகிரி” என்று பெயரிட்டு ஆண்டு வரலாயினர் புவநேயகயபாகு – தம்பதிநல்லாள் தம்பதியினர்.
(அந்த உன்னரசுகிரி இராசதானி அமைந்திருந்த இடம் “இன்றைய “குடும்பிமலை” என்கின்றனர் ஆய்வாளர்கள்.)
அவர்களுக்கு பிறந்த மகன் “மேகவண்ணன்” என அழைக்கப்பட்டான். தன் பெற்றோரின் காலத்துக்குப் பிறகு “மநுநேயகயபாகு” என்ற பெயரில் பட்டம் சூடினான். திருக்கோவில் ஆலயத்தை மீண்டும் புனரமைத்தான். பிரமாண்டமாய் அதற்கு கும்பாபிடேகமும் பண்ணுவித்தான். தன் தாயின் நினைவாக, அவள் திருக்கோவில் பூசையில் கலந்துகொண்டபின் தங்கிச் சென்ற இடத்தில், “தம்பதிவில்” என்று குளம் கட்டுவித்தான். மட்டக்களப்பை ஆண்ட பிரசன்னசித்துவின் மகனான “தாசகனு”டன் நட்பு பூண்டு பல நற்பணிகளை ஆற்றினான் என்று தொடர்ந்து கூறுகிறது மட்டக்களப்பு மான்மியம்!
சுவாரசியமான கதை ஒன்றைக் கேட்டாயிற்று! அந்தக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள, தம்பதி நல்லாளின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட “தம்பதிவில்”குளம் தான் இன்றைய இராமன் குளம்! “வில்” என்பது சிறுகுளத்தைக் குறிக்கும் ஈழத்துப் பழந்தமிழ்ச் சொல் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
இப்படித்தான் “வில்”களை மையமாக வைத்து, “பொதுவில்” (பொத்துவில்), ஒல்லிவில் (ஒலுவில்), குளவில் (கோளாவில்) போன்ற நம் அண்மைய ஊர்களும் தோன்றின என்றும் சிலர் கூறுகின்றனர்.
நாகர்முனை, கந்தபாணத்துறை என்றெல்லாம், அதற்கு முன்பு அழைக்கப்பட்ட நமது பிரதேசத்தின் வடபகுதி, பிற்காலத்தில், தம்பதிவில்லின் பெயரால் “தம்பதிவில்” என்றே அழைக்கப்பட, பிற்காலத்தில் அதுவே ஊரின் பெயராகவும் அமைந்துவிட்டது. “தம்பதிவில்” என்பது தான் மருவி “தம்பிலுவில்” ஆயிற்று!
அதேபோல், முருகன் கோவில் அமைந்திருந்த தென்பகுதி, கோவிலின் பெயரால் “திருக்கோவில்” என்றே அழைக்கப்படலாயிற்று!
இதுதான், நம்மூர்களுக்கு பெயர் வந்த கதை!
அடுத்து, இப்படி ஊருக்குப் பெயர் தந்த குளத்தை இன்று எப்படி வைத்திருக்கிறோம் என்பது தான் கேள்விக்குரியது. குளத்தின் பெரும்பகுதி தூர்க்கப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டது. இன்றும் கோடையில் வற்றி, மாரியில் மட்டும் நீர் ததும்பிக் காணப்படும் குளமாகத் தான் அது இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, பிரதேசசபையால் “குப்பை கொட்டத் தடை” என அறிவித்தற் பலகை வைக்கப்படும் வரை, அதுதானே நம்மூரின் குப்பைத் தொட்டி?


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!