
[Photos: NR]
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான திருக்குளிர்த்திச் சடங்கு விழாவின் இறுதி நிகழ்வான திருக்குளிர்த்தி நிகழ்வானது 2017.06.12 செவ்வாய் அதிகாலை பல்லாயிரம் அடியார் சூழ, இனிதே நடைபெற்றது.
முந்திய நாள் திங்கட்கிழமை மாலை ஆலய உள்வீதியில் விநாயகப் பானை மூட்டப்பட்டதை அடுத்து, வெளிவீதியில் ஆயிரக்கணக்கான பானைகளில் பொங்கல் வைத்து நேர்த்திகளை நிறைவேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னிரவில் ஆரம்பமான பூசையின் போது, அம்மானை ஆடல், திருவருகை, ஆறுதல், குளிர்தல் என்பன அடங்கிய குளிர்த்திப் பாடல் பாடப்பட்டு, எழுந்தருளி அம்மனை மஞ்சள் நீராட்டி, திருக்குளிர்த்திச் சடங்கு இடம்பெற்றது.
அதைத்தொடர்ந்து “பணிமாறல்” எனும் பாரம்பரிய நிகழ்வும், தொடர்ந்து அம்மன் நீராடிய “குளுத்தித் தீர்த்தம்” தெளித்து அடியவரை ஆசீர்வதித்தலும், குடிப்பாகையினருக்கு “குடுக்கை வழங்கலும்” இடம்பெற்றன. இறுதியாக அன்னையின் பிரசாதமான “குளுத்திப் பொங்கல்” வழங்கப்பட்டு, அன்னையின் ஆலயத் திருக்கதவு சாத்தப்பட்டது. 14.06.2017 புதன்கிழமை நாளை இடம்பெற இருக்கும் வைரவருக்கான மூன்றாம் சடங்குடன், உற்சவம் இனிதே நிறைவுபெற இருக்கின்றது.
மேலும் திருக்கதவு திறத்தல் முதல் திருக்குளிர்த்தி வரையான அனைத்து விதமான சடங்குகளும் ஆலய கப்புகனார் திரு. கந்தையா தங்கத்துரை அவர்களினால் நடைபெற்றது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!