அனல் மின் உற்பத்திக்கு பதிலாக எல்.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலமான மின் உற்பத்தி நிலையத்திற்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழு எதிர்காலத்திற்கான மின் சக்தி தேவை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால மின்சார தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தை முன்னெடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் மின் விநியோகத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு உடன் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை அமைச்சரவை உப குழு பரிந்துரை செய்துள்ளது.
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை இரட்டை எரிபொருளைப் பயன்படுத்தக்கூடியவாறு மாற்றுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால வரையரைக்குள் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்ட திட்டங்களுக்கு அமைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களாக மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!