அறிவின் மூலம் ஏற்படுத்தப்படும் புரட்சியே சமகால உலகின் சவால்களை வெற்றிகொண்டு, நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான சிறந்த அத்திவாரம். இன்றைய உலகளாவிய காலக்கிரமத்திற்கேற்றாற்போல் ஒவ்வொரு சமூகமும், அதன் தலைவர்களும் தூரநோக்குச் சிந்தனையை மையப்படுத்திய பாதையில் பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். அந்தவகையில் காலத்தின் தேவை அறிந்து 'அறிவின் மாற்றமே எமது சமூகத்தின் மாற்றம்' என்ற திடசங்கற்பத்துடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றம் சென்றுள்ள கௌரவ உறுப்பினர் ரொபின் அவர்கள் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கின்றார். கல்வி மேம்பாட்டை மையப்படுத்திய தனது பயணத்திட்டத்தை வினைத்திறன்மிக்க, அதியுயர் பயன்பாட்டுத் தன்மையை பிரதிபலிக்கக்கூடிய வகையில் அமுல்படுத்தும்பொருட்டு அவரால் பின்பற்றப்படவிருக்கும் வழிமுறைகள் கிழக்கு மாகாண அரசியல் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக அமையுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியியலாளர்களால் எதிர்வுகூறுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இன்றைய உலகம் அறிவைத் தளமாகக் கொண்டே இயங்கிக்கொண்டிருக்கிறது. அறிவால் ஆளப்படும் சமகால உலகில் அறிவிற்கான முதலீடே நிலையான அபிவிருத்திக்கான அதிசிறந்த முதலீடு என்பதை உலகம் உணர்ந்துள்ளது. கிழக்குப் பல்கலைக் கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பட்டதாரியான ரொபின் அவர்கள் தனது அறிவுசார் தூரநோக்குப் பார்வையை தனது பாராளுமன்றப் பிரவேசத்தினூடாக உயரிய முறையில் செயற்படுத்த நினைத்திருப்பது பிராந்திய அபிவிருத்திக்கான திட்டமிடலில் இயல்பாகவே அவருக்குள்ள ஈடுபாட்டைப் பிரதிபலிக்கின்றது.
அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைக் கொண்டு ஆலயங்களுக்கு ஒலிபெருக்கி வழங்குதல் மைதானங்களுக்கு கிறவல் இடுதல் முதலான செயற்பாடுகளுக்கே கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகூடிய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். சிலவேளைகளில் புலம்பெயர் நிதியங்கள் மூலம் வெளிப்படையற்ற முறையில் தங்களின் இஸ்டத்திற்கு ஏற்றாற்போல் சில வேலைத்திட்டங்களை தாங்கள் செய்யும் சேவையாகச் செய்தவரும் உளர். மேலும் சேவைக்கும் கடமைக்கும் வித்தியாசத்தை உணராத மக்கள் பிரதிநிதிகளும் இருந்துள்ளனர்.
ஆனால் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் அவர்கள் தற்போதைய உலகளாவிய காலக்கிரமத்திற்கு ஏற்றாற்போல் ஓர் முறைமையான, நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியென்பது அறிவு மேம்பாட்டை அடியொற்றியது என்பதை உணர்ந்தவராக தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார். அறிவுப் பொருளாதாரத்திற்கான முதலீட்டினை ஓர் கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான குழுவொன்றின் மூலம் நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மைக் கோட்பாடுகளை நிலைநிறுத்திச் செயற்படுத்துவதற்கு முனைகின்றார். தனது பத்து லட்சம் ரூபாய் சொந்த நிதியை முதலாகக்கொண்டு கல்விக்கான நிதியம், சிறந்த உபாயங்களை மேற்கொண்டு அதனை அமுல்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியியலாளர்களைக்கொண்ட சுதந்திர நிர்வாகக்கட்டமைப்பு, தனக்கு வழங்கப்படுகின்ற அனைத்துச் சம்பளங்களையும் மக்களின் கல்விச் சேவைக்கான நிதியத்திற்கு நன்கொடையாக்கல், கல்வி நிதியம் மூலமான அனைத்து விடயங்களையும் மக்கள் பார்வையிடும்பொருட்டு வெளிப்படையான இணைய தகவல் சேவை முதலான கொள்கைத் திட்டங்கள் கிழக்கு மாகாணத் தமிழ் அரசியல் வரலாற்றில அதியுன்னத நாகரீக அரசியல் முற்போக்குச் செயற்பாட்டின் கருவூலராக பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் அவர்களை மிளிரவைப்பதற்கான சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது.
மேலும், தனது சொந்த மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கிழக்கு பிராந்திய தமிழ் மக்கள் அனைவரையுமே இந்தத் திட்டத்தில் முன்மொழிந்திருப்பதானது அவரின் மேலான சமூகப் பற்றுறுதியை புடம்போட்டுக் காட்டுகின்றது. இவரின் திட்டங்கள், உபாயங்கள் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளாலும் பின்பற்றப்பட்டால் தமிழரின் வளமான் எதிர்காலத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!