கிழக்கு தமிழ்மாணவர் கல்விஅபிவிருத்திக்கு பாரியதிட்டம்:
கல்விநிதியத்திற்கு சொந்தநிதியில் 1மில்லியன்ருபாவும் பாராளுமன்றமுதல்சம்பளமும்!
காரைதீவில் அம்பாறை த.தே.கூ.புதிய எம்.பி. ரொபின் கன்னியுரையில்தெரிவிப்பு!
எனது பாராளுமன்ற சேவையின் முதற்கட்டமாக கிழக்கு ஏழைத்தமிழ்மாணவர்களின் கல்விஅபிவிருத்தியில் முக்கிய கவனம்செலுத்தவுள்ளேன்.அதற்கென 15பேராசிரியர்கள் அடங்கிய குழுவின் உதவியுடன் கல்வி அபிவிருத்திநிதியத்தை ஸ்தாபித்து அதனூடாக பல்வேறு கல்வி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். முதற்கட்டமாக அக்கல்வி நிதியத்திற்கு எனது சொந்த நிதியிலிருந்து 1மில்லியன் ருபாவையும் எனது பாராளுமன்ற முதல்மாத சம்பளத்தையும் வழங்கவிருக்கின்றேன்.
இவ்வாறு அம்பாறைமாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் (ரொபின்) காரைதீவில் கன்னியுரையாற்றுகையில் அதிரடி அறிவிப்பாக ஆனால் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
காரைதீவு 2003 உயர்தரபிரிவு சமுக அமைப்பு தொடர்ந்து 5வது வருடமாக நடாத்திய 05நாள் கருத்தரங்கின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவும் கடந்தாண்டு இடம்பெற்ற க.பொ.த.சா.த. பரீட்சையில் காரைதீவில் 9ஏ பெற்ற 04 மாணவியருக்கான கௌரவிப்புவிழாவும் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு உரையாற்றிய ரொபின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்பெருவிழா அமைப்பின் தலைவர் அருளானந்தம் வாகீசன் தலைமையில் காரைதீவு விபுலானந்த
மணிமண்டபத்தில் புதனன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பாராளுமன்றத்திற்குத் தெரிவானபின்பு அங்குசென்று பதிவுகளை மேற்கொண்டுதிரும்பியபின் அம்பாறை மாவட்டத்தில் கலந்துகொண்ட முதல்நிகழ்வு இது. அதுமட்டுமல்ல காரைதீவில் அமைப்புரீதியாக கலந்துகொண்ட முதல்நிகழ்வாகவுமுள்ளது.
விழாவில் கௌரவ அதிதிகளாக கல்முனை மாணவர் மீட்புப்பேரவையின் தலைவர் பொறியியலாளர் க.கணேஸ் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா விபுலானந்தா அதிபர் ரி.வித்யாராஜன் முன்னாள் தவிசாளர் வை.கோபிகாந் த.தே.கூ.முக்கியஸ்தர் கே.ஜெயசிறில் தகவல்தொழினுட்ப உத்தியோகத்தர் மு.ரமணிதரன் அமைப்பின் ஆலோசகர் எஸ்.அருளானந்தம் தமிழாசிரியர் கே.சுஜமதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
எம்.பி. ரொபின் மேலும் உரையாற்றுகையில்:
ஒரு சமுகத்தின் உயர்வுக்கு அடிப்படை கல்விதான். கல்விக்காக தமிழ்ச்சமுகம் செய்துவரும் தியாகங்கள் அதிகம். அதற்காகவே பல சாத்வீகப்போராட்டங்களையும் ஆயுதப்போராட்டத்தையும் தமிழ்மக்கள் நடாத்திவந்ததை நாமறிவோம்.
நாம் கல்வியில் ஏனைய சமுகங்களோடு போட்டிபோட்டு தலைநிமிர்ந்து வாழவேண்டும். கல்வியில் முன்னேற நாம் அனைவரும் சேர்ந்து கடும் முயற்சியெடுக்கவேண்டும். அதற்காக நான் எதனையும் செய்யவேன். இவ் அமைப்பு செய்துவரும் கல்விப்பணிக்கு நிச்சயம் வலதுகரமாக நின்று செயற்படுவேன்.
வாழ்த்துக்கள்!
இங்கு 9ஏ பெற்ற 4மாணவியர்களைப் பாராட்டுகிறீர்கள்.நல்லவிடயம். எனக்கும் இந்த கல்விச்சாதனையாளர்களைப்பாராட்ட வாய்ப்புகிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றிகூறுகின்றேன்.அதேபோன்று இம்மறை பரீட்சைக்குத்தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன்.
கல்விநிதியம்!
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு எனது பாராளுமன்ற முதல் சம்பளத்தை கல்விக்காகச் செலவிடவிருக்கின்றேன். அதாவது கல்விநிதியத்தை உருவாக்கிஏழைத்தமிழ்மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக உழைப்பேன்.
இதற்கு புலம்பெயர் தமிழர்அமைப்புகளும் வட-கிழக்கு பெரும் தனவந்தர்களும் உதவ முன்வந்துள்ளனர். இன்னும் ஒரு மாதகாலத்துள் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறும். முதலில் அம்பாறை மாவட்ட தமிழ்மாணவர்களுக்காக இதனைச்செய்யவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் புலம்பெயர் அமைப்புகள் தனவந்தர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மட்டக்களப்பு திருமலை மாவட்டத்திற்கும் சேர்த்து செயற்படுத்தவுள்ளோம்.
செயற்பாடு!
பேராசிரியர்களை உள்ளடக்கிய குழுவே இச்செயற்பாடுகளை மிகவும் வெளிப்படையாக மேற்கொள்ளும். அனைத்து நிதிச்செயற்பாடுகளும் கல்விச்செயற்பாடுகளும் அதற்கான இணையத்தளத்தில் மிகவும் பகிரங்கமாக உடனுக்குடன் இற்றைப்படுத்தி காட்சிக்கு விடப்படும். விபரமறியவிரும்புவர்கள் தாராளமாக அறியவாய்ப்பளிக்கப்படும்.
இது விடயத்தில் நான் ஒரு ஸ்தாபகராக மட்டுமிருப்பேன். எதிலும் தேவையில்லாமல் தலையிடமாட்டேன்.அனைத்துப்பணிகளையும் உருவாக்கப்படவிருக்கும் குழுக்களே வடிவமைத்துச் செயற்படுத்தும். இதற்கு அனைவரது ஒத்துழைப்புகளும் கிடைக்கும் பட்சத்தில் வடக்கிலும் விஸ்தரிக்கலாமென கருதுகின்றேன்.
வட-கிழக்கில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ்மாணவனும் கல்வியில் உயரவேண்டும் எனபதே எனது அவா. எனது இறுதிமூச்சுவரை கட்சிபேதங்களுக்கு அப்பால் எனது அம்பாறைமாவட்ட தமிழ்மக்களுக்காக முடிந்தவரை சேவையாற்றுவேன். என்றார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!